இனி என் வசிப்பிடம் blog.sanjaigandhi.com

Author: Sanjai Gandhi
•4:57:00 PM
தினமும் மாலை நேரங்களில் விளயாடும் விளையாட்டு இது... மாலையில் 15 பேருக்கு மேல் ஒன்று கூடினால் இந்த விளையாட்டு ஆரம்பித்துவிடுவோம். இது ஒளிந்துவிளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. ஒருவர் தவிர மற்ற அனைவரும் எங்காவது ஒளிந்துக் கொள்ளவேண்டும். அந்த ஒருவர் ஒளிந்துகொண்டிருக்கும் பிறரை கண்டுபிடிக்க வேண்டும். ஆண் பெண் எல்லோருமே இதில் இருப்பார்கள்.

முதலில் கண்டுபிடிப்பவரை முடிவு செய்ய வேண்டும். யார் கடைசியாக வந்து கலந்துக் கொள்கிறார்களோ அவர் தான் கண்டுபிடிப்பாளர். அதாவது இளிச்சவாயன்:). அப்படி எவனும் மாட்டாமல் எல்லோரும் ஒரே சமயத்தில் மாட்டினால், விளையாட்டில் கலந்துக் கொள்ளாத யாரையாவது கண்ணைக் கட்டி அவனுக்கு திசை தெரியாதவாறு சுற்றி விட வேண்டும். விளையாட்டில் கலந்து கொள்ள வேண்டிய அனைவரும் அவனை சுற்றி நின்றுகொள்வார்கள். யாரும் அசையக் கூடாது. கண்ணைக் கட்டிக் கொண்டவன் தோராயமாக வந்து யாரையாவது தொடுவான். தொடப் பட்டவன் மாட்டிக் கொள்வான்...

இப்போது ஆட்டம் ஆரம்பம். மாட்டிக்கொண்டவன் ஒரு மறைவான இடத்திற்கு சென்று ( படத்தில் இருக்கும் மரத்திற்கு பின்னாடி ) 50 வரை சத்தமாக எண்ண வேண்டும். 45..46..47..48..49..50 வருகிறேன்ன்ன்ன்ன்... என்று சத்தமாக அறிவித்துவிட்டு அந்த மறைவிடத்தில் இருந்து வெளிப்பட வேண்டும். அதற்குள் மற்றவர்கள் எல்லோரும் ஆளுக்கொரு இடமாக ஒளிந்துக் கொள்வார்கள்.

ஒளிந்துக் கொண்டவர்கள் எல்லோரையும் கண்டு பிடிக்க வேண்டும். கண்டு பிடித்ததும் கண்டுபிடிக்கப் பட்டவனின் பெயரை சொல்லி.. ஐஸ்பைஸ் 1 காந்தி( ஊரில் இப்படி சொன்னால் தான் என்னைத் தெரியும்.. சஞ்சய் என்றால்.. எதோ கெட்ட வார்த்தை என்று நினைத்து அடிக்க வந்துவிடுவார்கள். எங்கம்மா மட்டும் தான் அப்பப்போ சஞ்சய்னு சொல்வாங்க:P)... அடுத்தவன் கண்டுபிடிக்கப் பட்டால் ஐஸ்பைஸ் 2 சந்தோஷ்.. ஐஸ்பைஸ் 3 கவிதா... என்று ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்த எண்ணை சொல்ல வேண்டும். இதே போல் அனைவரையும் கண்டு பிடித்துவிட்டால் முதலில் கண்டுபிடிக்கப் பட்டவன் அடுத்த இளிச்சவாயன். :)).. அடுத்து அவன் மற்றவரை கண்டுபிடிக்க வேண்டும்.

ஒரே ஆட்டத்தில் எல்லோரையும் கண்டு பிடிப்பதெல்லாம் நடக்காத காரியம்... சில உள் நாட்டு அரசியல்கள் கைக் கொடுக்காத வரை.. :P...

எல்லோரையும் கண்டுபிடிக்கவில்லை என்றால் எப்படி ஆட்டம் முடியும்?.. முடியுமே... மாட்டிக்கொண்டவன் ஒருவனைக் கண்டுபிடிப்பதற்கு முன் அல்லது கண்டுபிடித்தும் அவன் பேரை சொல்வதற்குள் இவனை வந்து தொட்டுவிட்டால் ஆட்டம் முடிந்தது. பிறகு இவனே மறுபடி கண்டுபிடிக்க வேண்டும்...:D

முக்கிய விதி : எல்லோரையும் கண்டுபிடிப்பதற்குள் கண்டுபிடிப்பவனை யாராது தொட்டு, ஆட்டம் முடியும் போது மற்ற எல்லோரும் மறைவிடத்தில் இருந்து வெளிப்பட வேண்டும். அப்படி யாராவது வெளியில் வரவில்லை என்றால் அவர்கள் ஆட்டத்தில் இருந்து நீக்கப் படுவார்கள். அடுத்த முறை அவர்களை கண்டுபிடிக்கத் தேவை இல்லை. ஏன்னா.. அவன் வீட்டிற்கு போய் சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.. அல்லது மாமா, சித்தப்பா என்று யாருடனாவது சைக்கிளில் கிளம்னி இருப்பான்.. அடுத்த முறை( அடுத்த நாள் ) அவன் ஆட்டத்திக் சேர வேண்டும் என்றால் அநியாயத்திற்கு கெஞ்ச வேண்டும். அப்படியே சேர்த்துக் கொண்டாலும் அவன் தான் பிறரை கண்டுபிடிக்க வேண்டும்.. கண்ணைக் கட்டிக் கொண்டு யாரையும் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை...

அதே போல்.. ஆட்டத்தில் இடையில் யாராவது சேர்ந்துக் கொள்ள விரும்பினாலும் இதே நிலை தான்.. புதிதாக சேர்பவன் தான் பிறரைக் கண்டுபிடிக்க வேண்டும்.. அதுவரை கண்டுபிடித்துக் கொண்டிருந்தவன் ஒளிந்துக் கொள்பவரின் லிஸ்ட்டில் சேர்ந்துக் கொள்வான்.

உள்நாட்டு அரசியல் சதி 1 :-
முதலில் கண்டுபிடிக்கப் பட்டவன் பிறருக்கு பிடிக்காதவனாக இருந்தால் மற்றவர்கள் அவர்களாகவே வந்து மாட்டிக் கொள்வார்கள். அப்போ தானே முதலில் கண்டுபிடிக்கப் பட்டவன் அடுத்து மாட்டுவான். அவன் மாட்டும் போது இவர்கள் சிக்கவே மாட்டார்கள். அல்லது எப்படியாவது இவனை தொட்டுவிடுவார்கள். :))

இதற்கு வயசு வித்தியாசம் கிடையாது.. ஆனால் வகுப்பு வித்தியாசம் உண்டு.. 7 அல்லது 8ஆம் வகுப்புக்கு மேல் இருப்பவர்களுக்கு அனுமதி கிடையாது. :)

உள்நாட்டு அரசியல் சதி 2 :-
கண்டுபிடிப்பவன் சிலருக்கு பிடிக்காதவனாக இருந்தால்.. அந்த பிடிக்காத கும்பல் மொத்தமும் ஒரே சமயத்தில் இவனைத் தொட ஓடிவருவார்கள். இவர் ஒரு சமயத்தில் எத்தனைப் பேரைத்தான் சொல்ல முடியும்... ஆகவே அனைவரின் பெயரையும் சொல்லி முடிப்பதற்குள் ஒட்டுமொத்தமாக வந்து தொட்டுவிடுவார்கள். அதில் யார் பெயரையாவது இவன் சொல்லி முடிக்காமல் இருந்திருப்பான். அதனால் இவனே தோற்றவனாக இருந்து மறுபடி கண்டுபிடிக்க தயாராக வேண்டும். அல்லது தொட வருபவர்களிடமிருந்து தப்பித்து ஓடிக் கொண்டே இவனை துரத்துபவர்களின் பெயரை சொல்லி முடிக்க வேண்டும். :P

உள்நாட்டு அரசியல் சதி 3 :-
ஒரு கும்பல் வேறு யாராவது முதலில் மாட்டவேண்டும் என்று நினைத்திருப்பார்கள். அப்படி இல்லாமல் வேறு எதாவது ஒரு அப்பாவி ஜீவன் மாட்டிக் கொண்டால் அந்த கொலைவெறி கும்பல், கண்டுபிடிப்பவனுக்கு உதவி செய்வது போல் யாராவது சிலரை காட்டிக் கொடுத்து அவன் நம்பிக்கையை பெற்று பின் அவனை திசைதிருப்பி பின்னால் இருந்து வந்து எவனையாவது தொட வைத்து விடுவார்கள். இப்போது முதலில் அகப் பட்டவன் தப்பித்து விடுவான்.. :)

உள்நாட்டு அரசியல் சதி 4 :-
ஒருவன் முதலில் கண்டுபிடிப்பவனின் கண்ணில் பட்டாலும் அவன் பேரை சொல்ல மாட்டான்.. எப்படியாவது வேறு ஒருவனைக் கண்டு பிடித்ததும் முதலில் கண்ணில் பட்டவன் தானாகவே இவனிடம் மாட்டிக் கொள்வான். முதலில் சிக்குபவன் தானே பலி ஆடு. இரண்டாவது மாட்டுவது பிரச்சனை இல்லையே.. பிறகென்ன... இரண்டாவதாக அகப் பட்டவன் எல்லோரையும் காட்டிக் கொடுத்துவிடுவான்... இது இவர்கள் இருவருக்கும் முன் கூட்டியே போடப் பட்ட ஜெண்டில்மென் அக்ரீமெண்டாக இருக்கும்... அல்லது இருவரும் நெருங்கிய நண்பர்களாகவோ சகோதரர்கள் அல்லது சகோதரிகளாக இருப்பார்கள். :)

......... இவ்வளவு இருட்டியும் ஊட்டுக்கு வராம என்னடா விளையாட்டு என்று சொல்லி பல முதுகுகளில் பட்டாசு வெடிக்கும் வரை இது போன்ற இளிச்சவாயர்களை நொந்து நூலாக்கிவிடுவார்கள். :P
........ இந்த விளையாட்டு காணாமல் போய் பல ஆண்டுகள் ஆகிறது. இப்போது யாரும் இதை விளையாடுவது இல்லை.... தனியார் பள்ளிகள் கொடுக்கும் வீட்டு பாடங்களும்.. தனியார் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளும் இதை சாப்பிட்டுவிட்டன. உடல் பயிற்சிக்கே வழி இல்லாமல் போய் விட்டது..
........ அதிகாலை கிராமத்து நினைவுகள் 2 பாகம் தாண்டியும் எழுத சரக்கு இருப்பதால்.. இது ஒரு விளையாட்டு இடைவேளை... ஐஸ்பைஸ் பலருக்கும் தெரியாத விளையாட்டாக இருப்பதாக பின்னூட்டத்தில் சொல்லி இருந்ததால் இது முதல் விளையாட்டு இடைவேளையாக இடம் பெற்றிருக்கிறது. ஒரு வேளை மற்ற இடங்களில் இதற்கு வேறு பெயர் இருக்கலாம்.. பின்னூட்டத்தில் சொல்லுங்கப்பு..அடுத்த விளையாட்டு இடைவேளை........... சாணாங்கோல்.. :)
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..

This entry was posted on 4:57:00 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 Comments:

On September 23, 2008 at 8:31 PM , said...

எங்கூருல ஐஸ்-ஒன் அப்படின்னு சொல்லுவாங்க

 
On September 23, 2008 at 9:09 PM , said...

ஐயோ எப்பிடி இப்பிடி???????உடனே விளையாட வேண்டும் போல உள்ளது.....அந்த விளையாட்டின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்தவள் நான்....
அருமையான பதிவு.
அன்புடன் அருணா

 
On September 23, 2008 at 9:38 PM , said...

அசத்தல் சஞ்சய்... என்னை சின்ன வயசுக்கே கூட்டிட்டு போயிட்டீங்க.. எல்லா ஆட்ட நுணுக்கமும் சொல்லீடீங்க...:)))

 
On September 24, 2008 at 6:38 AM , said...

இதைவிட விவரமாக யாராலும் இதை விவரிக்க முடியாது. அருணா சொல்லியிருப்பதை போல நாங்களும் மணிக் கணக்கில் விளையாடியதுண்டு. ஆனால் வீட்டினுள்ளேயேதான் முற்றத்தில் ஆரம்பமாகும் விளையாட்டு. பல நினைவுகளைக் கிளப்பி விட்டது பதிவு. பாராட்டுக்கள் சஞ்சய்.

 
On September 24, 2008 at 7:03 PM , said...

அருமையா விவரிப்பு!

அம்புட்டும் இப்பவும் ஞாபகம் இருக்குறது நொம்ப சூப்பரப்பு!


எங்க ஊராண்ட இது ஐஸ் பால் அப்படிங்காட்டியும் வெளையாடறது!

ம்ம் அந்த காலம் போச்சு:(

 
On September 25, 2008 at 2:11 PM , Anonymous said...

ஐஸ்பாய் என்று எங்க ஊரில் சொல்லுவோம்...!!!

அப்படியே கொசுவத்தி சுத்தவெச்சுட்டீங்க

 
On October 7, 2008 at 1:58 AM , said...

எங்கள் ஊரில் இந்த விளையாட்டை ஐஸ் ஒண்ணு, ஐஸ் ரெண்டு, ஐஸ் மூணு, ... என்று தான் சொல்லுவோம்.
தங்களது அடுத்த பதிவை எதிர் நோக்கி காத்திருக்கிறேன் பழைய நினைவுகளில் மீண்டும் மூழ்க.

 
On October 13, 2008 at 8:36 PM , said...

பல கொசு வத்தி சுத்தி பாத்தாலும், இந்த மாதிரி ஒரு விளையாட்டு விளையாண்ட ஞாபகம் இல்ல. ஒரு வேளை, எங்கூருல எல்லாம் வெவரமானவங்களா இருப்பாய்ங்களோ? :)

 
On November 1, 2008 at 8:03 AM , said...

சஞ்சய் நானும் இத பத்தி ஒரு பதிவ போட்ருக்கேன். ஆனா உங்க detailed explanation simply superb. நேரம் இருந்தா என் வலைப்பூவில் ஒரு அட்டெனன்ஸ் போடுங்களேன்.

 
On November 25, 2008 at 4:01 PM , said...

இதையே நான் ஐஸ்பாய்ன்னு பசங்க வெளயாடறத பாத்திருக்கேன்.
ஆசயா இருக்கும்.
ஆனா நாமதான் சப்பாணி ஆச்சே, எங்க ஓடி ஆடறது.
ஒன்லி வாட்சிங் அண்ட் காட்டி கொடுத்திங். (அதுக்கு பூசை வாங்கனதெல்லாம் தனிக் கதை)

 
On July 14, 2009 at 7:36 PM , said...
This comment has been removed by the author.
 
On July 14, 2009 at 7:39 PM , said...

எங்க ஊரிலும் இதே ரூல்ஸ்தான் ஆனால் கண்ணை கட்டிகொண்டு தொடுவது மட்டும் கிடையாது சாட் பூட் திரி போட்டுக் கொள்வோம்.இதில் நீங்க சொல்லாத உள்நாட்டு அரசியல் பசங்க பொண்ணுங்களோட கொலுசு அல்லது வளையலை மாட்டிக் கொண்டு கண்டு பிடிப்பவனுக்கு போக்கு காட்டுவார்கள் அவசரத்தில் கண்டு பிடிப்பவன் பெயரை மாற்றிச் சொல்லிவிட்டால் திரும்பவும் அவனே கண்டு பிடிக்க வேண்டும்.மற்ற அனைத்து அரசியலும் அப்படியே எங்க ஊரிலும் நடக்கும்.இந்த விளையாட்டிற்கு எங்க ஊரில் ஐஸ் பாய்ஸ் அல்லது ஐஸ் என்ற பெயரில் விளையாடுவோம்.

"வருகிறேன்ன்ன்ன்ன்..." காதுக்குள் ஒலித்தது சஞ்சய், இந்த பதிவை படித்த போது.