இனி என் வசிப்பிடம் blog.sanjaigandhi.com

Author: Sanjai Gandhi
•2:27:00 PM
பனிக்காலம் வந்தாலே ஊர்ல தினமும் காலைல கலர் கோழிக் குஞ்சுகள் விக்கறவங்களை பார்க்கலாம். சைக்கிள் கேரியரில் அகலமான மூங்கில் கூடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக 2 அல்லது 3 கூடைகள நிறைய கோழிக் குஞ்சுகள் கொண்டு வருவாங்க. ஒரே சமயத்தில் 2 , 3 வியாபாரிகள் கூட ஒன்றாய் வந்து விற்பார்கள். பச்சை , சிவக்கு, நீலம், இளஞ்சிவப்பு , பழுப்பு என பல வண்ணங்களில் கோழிக் குஞ்சுகள் இருக்கும். எந்த வீட்டில் எல்லாம் பொடிசுகள் இருக்கிறார்களோ அவர்கள் வீட்டில் எல்லாம் இதற்கு டிமாண்ட் இருக்கும். எல்லோரும் வாங்கி வளர்ப்போம்.

நாட்டுக் கோழிகளுடன் சேர்க்காமல் இதை எப்போதும் கூண்டில் அடைத்து தனியாகவே வளர்ப்போம். நாட்டுக் கோழிகள் இவற்றை சேர்க்காது. கொத்தி காயப் படுத்திவிடும். கலர்க் கோழிக் குஞ்சுகள் வாங்கிய கொஞ்ச நாளிலேயே சாயம் வெளுத்துவிடும். சாயம் போனதும் எல்லா கலர்க் கோழிகளும் வெள்ளை நிறமாய் தான் இருக்கும்.

இதை பனிக்காலங்களில் விற்கக் காரணம் , இவைகளின் உணவு அப்போது தான் ஏராளமாக கிடைக்கும். கரையான்கள் தான் கலர்க் கோழிக் குஞ்சுகளுக்கு மிகவும் பிடித்த உணவு. அவைகள் பனிக்காலங்களில் தான் அதிகம் இருக்கும். எல்லா வகை மரங்கள், மண்ணில் விழுந்திருக்கும் சிறு சிறு குச்சிகள் ஆகியவற்றை சூழ்ந்து வீடு கட்டி குடி இருக்கும். ஒரு சிறு குச்சியை எடுத்து உதிர்த்தாலே போதும்.. நூற்றுக் கணக்கான கரையான்கள் அதில் இருந்து கீழே விழும். கலர் கோழிக் குஞ்சுகள் வேக வேகமாக அவற்றை கொத்தித் திண்பதே தனி அழகு.. இப்போது நினைத்தால் கொடூரமாக இருக்கிறது. ஒரு உயிர் வாழ எத்தனை உயிர்களை அழித்திருக்கிறோம்.

காலையில் எழுந்ததும் காலைக் கடன்கள் எல்லாம் முடித்து கூழ் குடித்துவிட்டு அவசர அவசரமாய் போய் கூண்டில் இருக்கும் கோழிக் குஞ்சுகளை கூட்டிக் கொண்டு வெளியே கிளம்பிவிடுவோம். வளர்க்க ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே நம்முடன் நன்கு பழகிவிடும். பிறகு நாம் எங்கு சென்றாலும் நம் கூடவே வரும். ஊரில் ரோட்டோரம் ஏராளமான மரங்கள் இருக்கும். அதில் எல்லா மரங்களிலும் கரையான் இருக்கும். கிராமங்களில் பெரும்பாலும் பெரிய பெரிய புற்றுகள் இருக்கும். பெரும்பாலான் பெரிய புற்றுகள் சாமி புற்றுகளாக்கி விடுவார்கள். அங்கெல்லாம் போகவே முடியாது. அதில் நிச்சயம் பாம்பு இருக்கும். பின்ன.. எல்லாப் புத்துக்கும் ஒரு சாமி பேர் வச்சி பக்கத்துல வேல்க் கம்பு நட்டு புத்துக்கு பூ வச்சி பொட்டு வச்சி பால் எல்லாம் ஊத்தினா பாம்பு குடி இல்லாம என்ன பண்ணுமாம்.. :)..

கொஞ்சம் சிறிய புற்றுகள் அல்லது ஏரியில் இருக்கும் கருவேல மரங்களின் உடைந்து விழுந்த குச்சிகள் ஆகியவற்றில் இருக்கும் கரையான்களை கோழிக் குஞ்சுகளுக்கு இரையாக்கிவிடுவோம். ஒரே இடத்தில் திரும்பத் திரும்ப கரையான் புற்றுகள் தோன்றிக் கொண்டே இருக்கும். அந்த குட்டி ஜீவன்களின் உழைப்பு அப்போது புரியவில்லை.

பிறகு கொஞ்சம் வெயில் அடிக்க ஆரம்பித்ததும் வீட்டிற்கு வந்து கோழிக் குஞ்சுகளை கூண்டில் அடைத்து விட்டு கூண்டை தொங்க விட்டு விடுவோம். அப்போது முழுவதுமே ஓட்டு வீடுகள் அல்லது குடிசை வீடுகள் தான் என்பதால் கூரை பகுதியில் ஓடு பொருத்துவதற்கு அல்லது ஓலை வேய்வதற்கு ஏதுவாக நீளமான மரக் கொம்புகள் இருக்கும். அதில் ஒரு நீளமான மெல்லிய இரும்புக் கம்பிகளை (கட்டுக் கம்பி) கட்டி அதில் கோழிக் கூண்டைத் தொங்க விட்டுவிடுவோம். எல்லாம் வீட்டு புலிகளின் (பூனைகள்) தாக்குதலில் இருந்து காக்கத் தான்.

பிறகு பள்ளிக்கு போய்விடுவோம். ஆனாலும் அதை பற்றிய எண்ணங்களே மூளையை ஆக்கிரமித்திருக்கும். எல்லா பயல்களும் கலர் கோழிக் குஞ்சுகள் வளர்ப்பார்கள் என்பதால் அவரவர் கோழிகள் பற்றிய பெருமைகள் பேசித் தீர்ப்போம்.

“ நான் என்ன சொல்றனோ அதத் தாண்டா என் கோழி கேக்கும்.. நான் கூப்டா வரும்.. எங்க பாப்பா(தங்கை) கூப்ட்டான்னா வரவே வராது..” என்பான் ஒருவன்.

“ டே... அதாவது பரவால்லடா.. எங்க கோழி செல்லு பூச்சிய(கரையான்) கீழ போட்டா தின்னாதுடா.. என் கைல வச்சா தான் நல்லா கொத்தி கொத்தி தின்னும்.. அதுக்கு என்னா கொழுப்பு பாத்தியாடா” என்பான் இன்னொருவன் பெருமையாக..

இப்படி ஏராளமான பேச்சுகள் அந்த கலர் கோழிக் குஞ்சுகளை வைத்து பேசப் படும். பின் பள்ளி முடிந்தவுடன் கோழிகளை அழைத்துக் கொண்டு கிளம்பி விடுவோம். மாலை நேரத்தில் அவ்வளவாக கரையான்கள் கிடைக்காது. எல்லாம் குழிக்குள் சென்றுவிடும். வெய்யில் காரணமாக இருக்கலாம்.. ஆனாலும் எங்கள் கோழிகளுடன் வெளியே சுத்துவது எங்களுக்கு பெருமை... இதில் வேடிக்கை என்னன்னா.. யாருமே கோழிகளின் முழு ஆயுளுக்கு அவற்றை வளர்த்ததில்லை.. பூனைகளிடம் இருந்து காப்பது அவ்வளவு சிரமம். அதில் தப்பினாலும் இருக்கவே இருக்கு பருந்துகள். எப்படி தான் கண்டுபிடிக்குமோ.. நாம் கொஞ்சம் அசந்தாலும் போதும்.. தூக்கிடும்.. அப்படியே அவைகளிடம் தப்பி வளர்த்தாலும் கொஞ்ச்ம பெரிசானவுடன் குழம்பாகிவிடும்.

அதை சாப்பிட்டுவிட்டு பள்ளியிலோ அல்லது பல பொடிசுகள் ஒன்றாய் இருக்கும் போதோ பேசிக் கொள்வோம்..

....”எங்க கோழில சுத்தமா எலும்பே இல்ல தெரியுமா?” என்பான் ஒருவன்.

.... போடா.. அன்னைக்கு எங்க அத்தூட்டார் (அத்தை வீட்டார்)வந்தப்போ எங்க கோழிய அறுத்துட்டோம். என்னா ருசி தெரியுமா?.. நாட்டுக் கோழி கூட அவ்ளோ ருசி இருக்காதுடா தம்பி.. நெனச்சிக்கோ..” என்பான் இன்னொருவன் பெருமையாக..
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..