இனி என் வசிப்பிடம் blog.sanjaigandhi.com

Author: Sanjai Gandhi
•8:49:00 PM
எச்சரிக்கை : இந்தப் பதிவு ஏற்கனவே என்னோட இன்னொரு வலைப்பூவில் வெளியிட்டது தான். பலரும் அதில் படித்திருப்பிர்கள்.இது கிராமத்து நினைவுகளுக்கு பொறுத்தமா இருக்கும் பதிவு என்பதால் இப்போது இங்கும் பதிவிடுகிறேன். அங்கு படிக்காதவர்கள் மட்டும் இந்த கொஞ்சூண்டு பெரிய பதிவை இங்கு படித்து பயனுறவும். ரொம்ப கஷ்டமா இருந்தா உங்கள வசதிக்கு ஏற்ற மாதிரி 4 அல்லது 5 பாகங்களாக படித்துக் கொள்ளவும். :))

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

2008ஆம் ஆண்டு பொங்கலுக்கு எங்க சித்தப்பா ஆதித்யனுக்கும் இனியாவுக்கும் ( சித்தப்பா பசங்க ) இது நெல்லு, இது கரும்பு, இது மஞ்சள்னு (இங்கிலிபீச்ல தான்) சொல்லிகிட்டு வந்தாரு. (அந்த குட்டிபசங்க பொறந்து வளர்ந்துட்டு இருக்கிறது சென்னைல தான். பண்டிகைகளுக்கு மட்டுமே எங்க வீட்டுக்கு வருவாங்க.).

அப்போ எங்கப்பா சொன்னாரு " இவங்களுக்கு அதிர்ஷடம் இருக்குடா.. இத எல்லாம் நேர்ல பாக்கிற குடுப்பனையாச்சும் இருக்கு. இவங்க பசங்களுக்கு இதை எல்லாம் இவங்க எதுனா மியூசியத்துல தான் காமிப்பாங்க".. விவசாயத்தின் நிலை இது தான். :(

அப்போ இருந்து ஒவ்வொரு மாதமும் ஊருக்கு போகும் போது தொட்டத்துல இருக்கிற பயிர்களை படமா புடிச்சி தள்றேன். :))... அதுல இருந்து ஒரு பாடம்... :)

எல்லோரும் அரிசிசோறு சாப்பிடறிங்களே.. அந்த அரிசி எபப்டி விளையுதுனு தெரியுமா?. கிராமத்து மக்களுக்கு நல்லா தெரியும். நகரத்திலேயே பிறந்த வளர்ந்தவர்களுக்கு?.. தெரியாது இல்ல.. ;).. இதோ இப்போ தெரிஞ்சிக்கலாம்.:)

முதலில் எவ்வளவு பரப்பளவில் நெல் பயிரவேண்டும் என்பதை முடிவு செய்துக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கு தேவையான விதை நெல்லை எடுத்து ஒரு கோணிப்பையில் போட்டு அதை தண்ணீர் தொட்டியில் ஊற வைக்கவேண்டும். ஊற வைத்த சில தினங்களில் அந்த நெல்மணிகள் முளைவிட ஆரம்பிக்கும். நெல்லை ஊறவைத்தவுடன் அதை விதைப்பதற்கு தேவையான அளவில் நிலத்தை உழுது அதை சேறாக்கி சேறை சமன்படுத்தி தயாராய் வைக்க வேண்டும்...

இந்த படத்தில் சாதாரனமாக உழுகிறார். இதே வயலில் நன்றாக நீர் நிரப்பி உழுதால் அந்த வயல் சேறாகி விடும். அதற்கு "ஜாடை" வைப்பது என்று சொல்வோம். நாங்க எல்லாம் இதில் தான் ஏர் ஓட்டக் கற்றுக்கொள்வோம். ஏன்னா ஜாடை வைப்பதில் வயலை நன்றாக சேறாக வேண்டும் என்பது தான் நோக்கம். அதில் சீராக ஏர் ஓட்ட( உழுதல்) வேண்டும் என்று அவசியம் இல்லை. முதலில் கற்றுகொள்ளும் போது நேராக உழ முடியாது. கலப்பையின் கைப்பிடிக்கு "மோழி" என்று பெயர். மோழியை சரியாக பிடிக்க வில்லை என்றால் நேராக உழ முடியாது. எருதின் கால்கள் சேதமாகவும் வாய்ப்பு இருக்கு. முதலில் ஒரு அனுபவசாலியுடன் சேர்ந்து மோழியை பிடித்து தான் பழக வேண்டும். நெல் பயிர் தவிர மற்ற பயிர்கள் அனைத்திற்கும் நேராக உழ வேண்டும். அதில் பாத்தி கட்டுதல் , வாய்க்கால் போடுதல் என சில வேலைகள் இருக்கும்.
( ஏர் உழுவதற்கு பொதுவாக எருதுகள் தான் பயன்படுத்துவார்கள். இப்போது எருதுகள் பார்ப்பது அரிதாகிவிட்டது. மேலே உள்ள படத்தில் இருப்பது எருதுகள் அல்ல. பசுமாடுகள். பசுமாடுகளுக்கு எருதுகள் போல் வலிமை கிடையாது. இப்போது எருதுகள் இல்லாததால் பசுமாடுகள் பயன்படுத்துகிறார்கள். பசுமாடுகளை பழக்கப் படுத்துவது படு சிரமமான காரியம். இப்போது 99% ட்ராக்டர்கள் தான் உழுவதற்கு பயன்படுத்துகிறார்கள்.).... ச்சோ..ச்சோ என்றால் இடது எருதும், பா..பா என்றால் வலது எருதும் நமக்கு கட்டுபடும். :))... இதற்கு சில வாய் சுழிப்பு மூலம் வரும் ஓசைகளும் இருக்கு. :)).. எல்லாம் ஒரே பவாய் போட்டால் பதிவு பெரிதாகிவிடும். தனி பதிவாய் போடுகிறேன்.


(நெல் விதைத்தான் இப்படி தான் அடர்த்தியாக வளரும்.)
நெல்மணிகள் முளைவிட்ட உடன் அவைகளை எடுத்து சேறாக்கிய வயலில் விதைக்க வேண்டும். அடர்த்தியாக விதைக்க வேண்டும். பெரும்பாலும் விதை நெல் சரியான அளவில் இருக்கும். சில சமயங்களில் கொஞ்சம் மிச்சமாகி விடும். அதை பரவலாக அந்த வயலிலேயே தூவி விடலாம். அதற்கு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 20 முதல் 25 நாட்களில் நன்றாக நெல் பயிர் வளர்ந்துவிடும். விதைபயிர் வளர்ந்துக் கொண்டு இருக்கும் போதே அந்த பயிர் நடுவதற்கு தேவையான பரப்பளவில் ஜாடை வைக்க வேண்டும். அதாவது வயலில் நீர் நிரப்பி, அதில் எருது அல்லது ட்ராக்டர் ( இதற்கு இரும்பினால் ஆன உயரமான சக்கரங்கள் ட்ராக்டரின் பின் சக்கரமாக பயன்படுத்த வேண்டும்) மூலம் உழுது நங்உ சேறாக்க வேண்டும். அதில் "எரு"( மக்கிய சாணம்), சில வகை இழை தலைகள் போட்டு அதன் மீது மீண்டும் ட்ராக்டர் மூலம் நசுங்க வைத்து சேறுடன் கலக்க செய்ய வேண்டும்.

அது முடிந்ததும் வயல் ஓரத்தில் இருக்கும் வரப்பை கேக் வெட்டுவதை போல மண்வெட்டியால் வெட்டியால் வெட்டி சரி செய்ய வேண்டும். வரப்பு தகறாரு கேள்வி பட்டிருப்பீங்க இல்ல. அது இதனால் தான் ஆரம்பிக்கும். :))... ஒவ்வொரு முறை வெரப்பை வெட்டும் போதும் அதன் தடினன் குறந்துக் கொண்டே வரும். அதனை ஒட்டிய வயலுக்கு சொந்த காரர் அவர் பகுதியில் வெட்டிக் கொண்டே இருப்பார். இந்த பக்கம் இருப்பவர் இவர் வசதிக்கு வெட்டி கொண்டே வருவார். ஒரு குறிபிட்ட சாகுபடிக்கு பிறகு வரப்பு மிகக் குறுகியதாகிவிடும். அதன் மீது நடப்பதற்கு கூட இடமில்லாமல் போய்விடும். அப்போது தான் வரப்பு தகறாரு வரும். :P... எங்க ஊரில் மண்வெட்டிக்கு "சனுக்கை" என்று பெயர். வரப்பு வெட்டுவதற்கு "அண்டை வெட்டுதல் அல்லது அண்டை கழித்தல்" என்று பெயர்.

பிறகு ஜாடையை "பரம்பு" ( T யை தலைகீழாக கவிழ்த்த மாதிரி ஒரு கருவி. மரத்தால் ஆனது) கொண்டு எருது அல்லது ட்ராக்டரில் இணைத்து சேறை சமன் படுத்த வேண்டும். மேடு பள்ளாம் இல்லாமல் செய்ய வேண்டும். அப்போது தான் நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும்.

பிறகு முதலில் விதைத்து பயிரான நெல் பயிர்களை பிடுங்கி அதை சிறு சிறு கத்தையாக கட்ட வேண்டும். அதை கட்டுவதற்கு வாழை நார் உபயோகிப்போம். கத்தையாக கட்டிய இந்த பயிர்களை கொண்டு சென்று பயிர் நடுவதற்காக உருவாக்கிய வயல்களில் சீரான இடைவெளியில் வீசிவிட வேண்டும். பிறகு ஆட்கள்( பெரும்பாலும் பெண்கள், ஆர்வக் கோளாரில் சில சமயங்களில் நானும்:) அந்த ஜாடையில் இறங்கி ஆளுக்கு ஒன்று அல்லது ஒன்னரை மீட்டர் இடைவெளியில் இடம் பிடித்துக் கொண்டு பயிர் நட ஆரம்பிப்பார்கள். பயிர் நடும் முறை கிணற்று பாசனம் செய்யும் இடங்களில் ஒரு மாதிரியும் ஆற்று பாசனங்கள் இருக்கும் இடங்களில் ஒரு மாதிரியும் இருக்கும். எங்க பகுதியில் கிணற்று பாசனம் மட்டுமே . ஆகவே அடர்த்தியாக நடுவார்கள். ஆற்று பாசனம் இருக்கும் இடங்களில் அதிக இடைவெளியில் நடுவார்கள். பரிர் நடும் போது காலால் ஏற்படும் குழிகளை கைய்யால் சமன் படுத்திக் கொண்டே வருவார்கள். இல்லை எனில் அந்த குழிகளுக்கும் சேர்த்து தேவை இல்லாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் பற்றாக் குறை காலங்களில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பயிர் சற்று வளரும் வரை மிதமான அளவே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மழை வந்து விட்டால் வயல் முழுதும் நிரம்பிவிடும். அப்போது வரப்பில் சிறிய உடைப்பு உண்டாக்கி தேவையில்லாத தண்னீரை வெளியேற்ற வேண்டும். இல்லை எனில் பயிர் முழுதும் நீரில் மூழ்கி சூரிய ஒளி இல்லாமல் அழுகி விடும். அதாவது செத்துவிடும்.

வயலில் பயிர் நட்டு 40 அல்லது 45 நாட்களில் இந்த படத்தில் உள்ளது போல் வளர்ந்திருக்கும். இந்த கால கடங்களில் பயிரை பூச்சிகள் தாக்கும். எனவே பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்க வேண்டும். அவ்வப்போது யூரியா, உரம் போன்றவற்றை இட வேண்டும். பூச்சிகொல்லி மருந்தடிக்கும் முறை பற்றி தனி பதிவு போடுகிறேன்.
இந்த படத்தில் வெள்ளையாக தெரிவது ட்யூப்லைட்டுகள். கொக்குகளிடம் இருந்து பயிரை காக்க இந்த தந்திரம். வெயிலின் இது மின்னுவதால் அவைகள் பயத்தில் வராது. இல்லை என்றால் பெரும் படைகளாக வந்து பயிரை மிதித்து நாசம் செய்துவிடும். நெல் கதிர்கள் உறுவாக ஆரம்பித்ததும் குருவிகளின் வேட்டையிலிருந்து காக்க வயல்களின் குறுக்கே கயிறுகள் கட்டி அதில் சிரு சிறு மணிகள் தொங்க விடுவோம். குருவிகள் அந்த கயிறின் மீது அமர்ந்தால் கயிறின் அசைவில் அந்த மணி ஒலி எழுப்பும். உடனே குருவிகள் பறந்துவிடும்.

மணிகளுக்கு பதில் ஆடியோ கேசட்டுகளில் உள்ள டேப்பை எடுத்து வயல்களின் குறுக்கே கட்டிவிடுவோம். காற்றில் அவைகளில் வித்தியாசமான பயமுருத்தும் வகையிலான ஒலி கிடைக்கும். இதனால் குருவிகள் வராது. இப்படியும் நெல்லை காக்கலாம். இன்னும் சிலர் பெரிய தகர டின்களை வைத்து குருவிகள் வரும் போது அதை பலமாக அடித்து அவற்றை விரட்டுவார்கள். "கவட்டை" எனும் கல் எறியும் கருவி மூலமும் குருவி விரட்டலாம்.

கவட்டை - -----( )------ கைகள் இரண்டையும் கோர்த்துக்கொண்டு உள்ளங்கையை குவித்துக் கொண்டால் ஒரு ஷேப் கிடைக்கும்ல.. அதன் இரண்டு முனைகளையும் கயிற்றால் நம் கையின் நீளத்துக்கு கட்டிகொண்டால் எப்படி இருக்குமோ அது தான் கவட்டை. உள்ளங்கை போன்ற பகுதியில் சில சிறு கற்களை வைத்து கயிற்றின் 2 முனைகளையும் ஒரு கைய்யில் பிடித்துக் கொண்டு வேகமாக சுழற்றி பின் ஒரு முனையை மற்றும் விட வேண்டும். அதில் இருக்கும் கற்கள் அனைத்தும் பல திசைகளில் தூரமாக சென்று விழும். இதனால் குருவிகள் பறந்துவிடும்.

60 முதல் 70 நாட்களுக்குள் இந்த நிலை வந்துவிடும். நெல்மணிகள் பழுப்பு நிறம் வர ஆரம்பித்துவிடும். 3 மாதம் முடியும் போது அருவடைக்கு தயாராய் இருக்கும். பல் சக்கறம் போன்ற அமைப்புடன் இருக்கும் சிறு சிரு அரிவாள்கள் கொண்டு தரையிலிருந்து நான்கு அல்லது 5 அங்குல உயரத்தில் பயிர்களை அறுக்க வேண்டும். கதிர் அறுப்பதற்காகவே ஸ்பெஷலாக சாணை பிடிப்பார்கள். அப்போது தான் ஒரே வீச்சில் அறுக்க முடியும். பயிர் நடுவதற்கு எப்படி சீரான இடைவெளியில் ஆட்கள் நடுவார்களோ அதே மாதிரி தான் இதையும் செய்வார்கள். அறுவடைக்கு தயாராய் இருக்கும் நெல் பயிர் "தாள்" என்று அழைக்கப் படும். அவைகளை அறுத்து கத்தைகளாக கட்டுவது "சுமை" கட்டுவது என்று சொல்வோம். ஒவ்வொரு வயலிலும் எத்தனை சுமை என்பது எண்ணப் படும் . அதை வைத்தே எத்தனை மூட்டை நெல் கிடைக்கும் என்பதை கணிக்கலாம். பிறகு இந்த சுமைகளை மாட்டு வண்டியில் அல்லது ட்ராக்டரில் ஏற்றி களத்திற்கு கொண்டு செல்வோம். களம் என்பது கதிர் அடிகக்வும், தாணியங்களை உலர்த்தவும் ( காய வைக்க) பிரத்தியேகமாக தயாரிக்கப் படும் இடம்.
இது கதிர் அறுத்த நெல் வயல்.

கதிர் அடிக்கும் முறை -
பழையது : சுமைகளை பிரித்து நெல்மணிகள் மேல்நோக்கி இருக்குமாறு களத்தில் வட்ட வடிவில் அடுக்க வேண்டும். அதன் மீது 2 அல்லது 3 ஜோடி எருதுகளைக் கொண்டு மிதிக்க வைக்க வேண்டும் . இதன் மூலம் 95 சதவீத நெல் மணிகள் உதிர்ந்துவிடும். மிச்சம் மீதி இருப்பதை மனித சக்தி மூலம் பிரித்தெடுக்கனும். அதற்கு ஆடுகள் அடைக்க பயன்படும் பட்டிகள் கட்ட பயன்படுத்தப் படும் பிளந்த மூங்கில்களால் பின்னப் பட்ட "படல்கள்" பயன்படுத்தப் படும். அந்த படல்களை 2 ஊன்றுகோல்கள் மூல சாய்வாக நிற்க வைத்து அதன் மீது நெற்பயிர்களை சிறு சிறு கத்தைகளாக எடுத்து ஓங்கி அடிக்க வேண்டும். இப்போது மிச்சம் மீதி ஒட்டி இருந்த நெல்மணிகளும் உதிர்ந்துவிடும். பிறகு வைக்கோலை மட்டும் எடுத்து காலி வயல்கள் அல்லது காலி இடத்தில் பரவலாக போட்டு உலர்த்த வேண்டும். பிறகு கீழே இருக்கும் நெல்களை முறங்களில் அள்ளி உயரமாக பிடித்துக் கொண்டு லேசாக அசைத்தவாறே நெல்மணிகள் கீழே விழுமாறு செய்ய வேண்டும். இதற்கு லேசான காற்றாவது வீச வேண்டும். அப்போது தான் பதர்கள் காற்றில் பறந்து சற்று தூரமாக விழும். நல்ல மணிகள் மட்டும் கீழே ஓரிடத்தில் விழும். இதை பலர் செய்ய வேண்டும். நெல்லை அள்ளி வேகமாக வீசுவதன் மூலமும் இதை செய்யலாம். பிறகு அவற்றை கோணிப்பைகளில் கட்டி சேமிக்க வேண்டியது தான். நெல்லின் அளவை பொறுத்து விற்பதும் வீட்டிலேயே வைபப்தும் முடிவு செய்யப் படும்.

புதிய முறை : கதிர் அடிக்கும் இயந்திரத்தின் மெல் பகுதியில் நெல்பயிரை எந்திரத்திர்குல் செலுத்தும் பகுதி இருக்கும். அந்த இடத்தில் உட்கார்ந்துக் கொண்டு நெல்மனிகள் முன்புறம் இருக்கும் வகையில் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே செலுத்த வேண்டும். கீழே இருந்து ஒருவர் சுமைகளை எடுத்துக் கொடுக்க வேண்டும். அருகில் இருந்து ஒருவர் சுமைகளை கட்டி இருக்கும் நார்களை அறுத்து விடுவார். உள்ளே சென்ற நெல்பயிர் கதிர்கள் தனியாக எந்திரத்தின் பக்கவாட்டில் உள்ள சிறு பகுதிவழியாக நெல்மணிகளாகவும் பின்புறம் உள்ள பெரிய பகுதி வழியாக வைக்கோலும் பதர்களும் வரும். நெல்மணிகளை சிறு சிறு பாத்திரங்கள் கொண்டு சேமித்து அவற்றை கோணிப் பையில் அல்லது வீட்டின் ஒரு பகுதியில் போட வேண்டும். பின் பகுதியில் ஒரு கயிற்றுக் கட்டில் இனைக்கப் பட்டிருக்கும். அதன் மீது தான் வைக்கோல் வெளியேறும். அங்கே 2 பக்கமும் 2 பேர் நின்றுகொண்டு வரும் வைக்கோலை அலசி அலசி வீசுவார்கள். ஏனென்றால் வைக்கோலுடன் ஒட்டிகொண்டு வரும் நெல்களை மற்றும் ம்பதர்கள் கயிற்றுக் கட்டிலுக்கு கீல் விழச் செய்வது தான் நோக்கம். பதர்கள் மாடுகளுக்கு தவிடு அரைக்க உதவும். இனி யாரையும் பதர்களே என திட்டாதிர்கள். பதர்களும் பயன்படும். :) இந்த வகையில் கதிர் அடிக்க .. சுமைகளை கொடுக்க ஒருவர், அவற்றின் கட்டுகளை அறுக்க ஒருவர், சுமைகளை உள்ளே அனுப்ப ஒருவர், நெல்மணிகளை அள்ள ஒருவர், கோனிப்பை பிடிக்க ஒருவர், வைகோலை அலச இருவர், அலசிய வைக்கோலை காலி இடங்களுக்கு இழுத்து செல்ல இருவர் ( கை வலி உயிர் போகும்), அவற்றை பரவலாக பரப்ப ஒருவர் அல்லது இருவர் என குறைந்தது 10 பேர் வெண்டும். இற்கு கூலிக்கு ஆள் வருவது அரிது. ரொம்பவே கொடுமையான காரியம் இது. எனவே எங்களுக்கு இந்த வேலைக்கு வரவங்களுக்கு , அவங்க கதிர் அடிக்கும் போது நான் போய் செய்ய வேண்டும். இதே போல் ஷேர் பண்ணிப்போம். இதர்கு "மொய்" ஆள் என்று பெயர் :).அதாவது பரஸ்பர உதவி. இந்த மொய் ஆள் மேட்டர் எல்லா தோட்ட வேலைகளிலும் இருக்கும்.

பழைய முறையோ புதிய முறையோ... எதுவயினும் வெயில் அடிக்கும் போது செய்ய மாட்டோம். இரவிலும் இளங்காலை வேளையிலுமே செய்வோம். இது உடலை கிழிக்கும் செயல் என்பதால் வெயிலில் செய்தால் எரிச்சல் தாங்க முடியாது. இதை முடித்தவுடன் குளிர்ந்த நீரில் கண்டிப்பாக குளிக்க வேண்டும். அது கடுமையான குளிர்காலமாக இருப்பினும். இரவு 1 மணி 2 மணி வரையிலும் கூட இதை செய்ய வேண்டி இருக்கும்.

... இப்போது பழைய முறை முற்றிலும் அழிந்துவிட்டது. புதிய முறை மட்டுமே இருக்கு...

அப்பாலிக்கா இன்னா... நெல்லை அரவை மில்களுக்கு கொண்டு போய் அரைத்து கிடைக்கும் அரிசியை நாமும் தவிடை மாடுகளும் பங்கு போட்டுக்க வேண்டியது தான். :))


குறிப்பு : இந்த பதிவில் சாகுபடி முறை ஓரளவுக்கு சரியாக இருந்தாலும் இதில் குறிபிட்டிருக்கும் வளர்ச்சி காலங்கள் ஒவ்வொரு ரகத்திர்கும் ஒரு மாதிரி மாறும். சில ரகங்கள் 3 மாதத்தில் மகசூல் குடுக்கும். சிலது 4 மாதம் சிலது 5 மாதம் என மாறுபடும். இப்போது நாற்று நட, கதிர் அறுக்க, கதிர் அடிக்க எல்லாவற்றும் எந்திரம் வந்தாச்சி.
................க்ளாஸ் ஓவர்.. எல்லாரும் ஊட்டுக்கு போங்கோ.. :))


பெரிய பதிவாதலால் வழக்கம் போல் எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும். :).. ஏர் ஓட்டும் முதல் படம் பக்கத்து வயலில் எடுத்தது. மற்ற்வை எங்க வயல்கள். இதில் விவரித்திருக்கும் அனைத்து வேலையும் செய்திருக்கிறேன். எல்லாம் என் அனுபவமே பழய முறை கதிர் அடித்தல் உட்பட. ஆனால் இவை எலலாம் விட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் கொஞ்சம் மங்கலான நினைவுகள் தான். அந்த மங்கலான நினைவும் மங்கி போவதற்கு முன் பிரதி எடுத்துவைக்கும் ஒரு சின்ன முயற்சியே இது. :)

பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..

This entry was posted on 8:49:00 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

30 Comments:

On February 3, 2009 at 9:00 PM , *இயற்கை ராஜி* said...

;-)

 
On February 3, 2009 at 9:04 PM , *இயற்கை ராஜி* said...

இதுக்கு சூப்ப‌ரா ஒரு த‌லைப்பு வ‌ச்சிருந்தீங்க‌ளே....ம‌ற‌க்குமா என்ன‌?:‍)

 
On February 3, 2009 at 9:05 PM , *இயற்கை ராஜி* said...

இதையாவ‌து எழுத்துப்பிழை இல்லாம‌ போட‌க்கூடாதா?

 
On February 3, 2009 at 9:07 PM , *இயற்கை ராஜி* said...

என்ன‌ப்பா.. நெல்லு ம‌ர‌ம் போட்டோவும் போட்டு இருக்க‌லாம் இல்ல‌

 
On February 4, 2009 at 9:35 AM , கார்க்கிபவா said...

கிகிகி.. பாதி படிச்சேன். மிதி படிச்சிட்டு கமெண்டுறேன்

 
On February 4, 2009 at 2:16 PM , Anonymous said...

போட்டோவெல்லாம் உங்க தோட்டமா

 
On February 4, 2009 at 2:24 PM , Sanjai Gandhi said...

ராஜி, நெல்லு மரம் தான? படம் புடிச்சிடலாம்.. :))

கார்க்கி, மீதிய இன்னுமா படிக்கிரிங்க? ;)

சின்ன அம்மிணி அக்கா,
ஆமாம்.. அது நம்ம தோட்டம் தானுங்க.. :)

 
On February 4, 2009 at 10:37 PM , நாகராஜன் said...

அருமைங்க... கொடுத்து வைச்சவங்க நீங்க... இந்த வேலைல எல்லாம் பங்கெடுத்ததை தான் சொல்லறேன்.

நானும் இதை எல்லாம் பார்த்திருக்கிறேன்... ஆனால் களத்துல நெல்லு மிதிக்கறது மட்டும் தான் செஞ்சிருக்கிறேன். நல்லா ஓடி பிடிச்சு விளையாடுவோம் விழுந்தாலும் அடி படாதுங்கறதுனால நல்ல குதி குதின்னு குதிச்சிருக்கோம்.

மறுபடியும் என்னை பழைய நினைவுகளில் மூழ்கடித்து விட்டீர்கள் போங்க.

 
On February 6, 2009 at 11:47 AM , தாரணி பிரியா said...

உருப்படியா ஒரு பதிவு. :)

எனக்கும் ஊருக்கு போக ஆசை வந்துருச்சே. கண்ணனோட அம்மா ஊர் இப்படிதான் இருக்கும் :). உங்க ஊர் பக்கம்தான் பாலக்கோடு :)

 
On February 6, 2009 at 12:09 PM , Unknown said...

அருமையான பதிவு, தம்பி! நானும் நெனச்சுகிட்டு இருந்தேன். இது மாதிரி ஒரு விரிவான பதிவு போடனும்னு :) மத்த பயிருக்குப் போட்டுடலாம் ...

 
On February 6, 2009 at 12:38 PM , narsim said...

மிகவும் ரசித்தேன் சஞ்செய்

 
On February 6, 2009 at 1:24 PM , நானானி said...

//நெல்லு ம‌ர‌ம் போட்டோவும் போட்டு இருக்க‌லாம் இல்ல‌//
இயற்கைன்னு பேர வச்சுக்கிட்டு நெல்லு மரம் கேக்கிறாரே? அப்பா சொன்னது போல் மியூசியத்துக்கு கூட்டிப் போய் காட்டுங்க.
நல்ல பதிவு. வயக்காட்டிலே, மரநிழலே உக்காந்துகிட்டு, உழது, நாத்து நட்டு, களை எடுத்து, உரம் போட்டு, கதிரறுத்து, களத்துமேட்டிலே போரடிச்சு, அளந்து மூட்டை கட்டி வீடு சேர்க்கும் வரை பாத்தா மாதிரி இருந்தது. யாராவது கலயத்திலே கஞ்சி கொண்டுவந்திருந்தால் இன்னும் நல்லாருந்திருக்கும்.

 
On February 7, 2009 at 11:32 PM , Sanjai Gandhi said...

//நல்லா ஓடி பிடிச்சு விளையாடுவோம் விழுந்தாலும் அடி படாதுங்கறதுனால நல்ல குதி குதின்னு குதிச்சிருக்கோம்.//

ராசுகுட்டி,
இரவு நேரங்களில் இதில் ஒளிந்து விளையாடுவோம். வைக்கோலுக்கு உள்ளே போய் ஒளிந்துக் கொள்வோம். விளையாட்டு முடிந்து வீட்டிற்கு போனால் உடலெங்கும் கிழித்து எரியும். குளிக்காமல் படுத்தால் தூங்க முடியாது. :)

 
On February 7, 2009 at 11:34 PM , Sanjai Gandhi said...

நன்றி தாரணி அக்கா..

பாலக்கோடா? கொஞ்சம் பசுமையான ஊர் தான்.. கேஆர்பி அணை தண்ணீர் பாசனம். தக்காளி அதிக அளவில் விளையும். :)

 
On February 7, 2009 at 11:37 PM , Sanjai Gandhi said...

நன்றி இந்திய பில்கேட்ஸ் :)

இன்னும் எவ்ளோ இருக்கு.. அதை எல்லாம் எழுதுங்க.. ஒரு ஆள் செஞ்சி முடிக்கிற வேலையா இது.. இந்த வலைப்பூ முழுக்க முழுக்க கிராம நினைவுகளுக்கு மட்டுமே.. அதனால எழுதினதும் லின்க் குடுங்க.. இங்கயும் சுட்டி குடுக்கறேன்.. :)

 
On February 7, 2009 at 11:38 PM , Sanjai Gandhi said...

ரொம்ப நன்றி நர்சிம். பெரியவங்க எல்லாம் வந்திருக்கிங்க.. சந்தோஷமா இருக்கு.. :)

 
On February 7, 2009 at 11:39 PM , Sanjai Gandhi said...

ரொம்ப நன்றி நானானி.. :)

//யாராவது கலயத்திலே கஞ்சி கொண்டுவந்திருந்தால் இன்னும் நல்லாருந்திருக்கும்./

ஹ்ம்ம்ம்.. உங்களுக்கு தெரியுது.. என்ன பெத்தவங்களுக்கு தெரியலையே.. :(

 
On February 8, 2009 at 8:57 AM , RAMYA said...

ஒரு கிராமத்தையே படம் படிச்சி காட்டி இருக்கீங்க சஞ்சய்.

உங்களின் இந்த பதிவு மிகவும் அருமை!!!

கண்கள் அலையும் இடம் மெல்லாம் ஒரே பசுமைதான் அந்த பசுமையை கெடுக்காமல் இதே போல் விட்டால்
நாமும் எப்போதும் உணவிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கலாம்.

வாழ்த்துக்கள் சஞ்சய் !!!

 
On February 8, 2009 at 8:59 AM , RAMYA said...

தாமதத்திற்கு மன்னிக்கவும்
வேலை பளு அதிகம்.

Better Nevr Than Late
Am I Correct ???

 
On February 8, 2009 at 12:31 PM , Unknown said...

//நன்றி இந்திய பில்கேட்ஸ் :)//

ஓ... இதான் வஞ்சப் புகழ்ச்சி அணி என்பதோ? :)

கடலை, சோளம், எள் (ரொம்ப சுலபம்) பத்தி எழுதலாம்னு ஒரு எண்ணம் இருக்கு. நேரமிருப்பின் பண்ணிடலாம். தொடுப்பு குடுங்க..

 
On February 8, 2009 at 2:24 PM , உண்மைத்தமிழன் said...

அண்ணே..

விவசாயி அண்ணே..

உங்களுடைய பின்புலம் இப்படியெல்லாம் இருக்கும்னு நான் கனவுலகூட நினைக்கலீங்கண்ணேன்..

இப்பத்தான் முதல் தடவையா படிச்சு முடிச்சேன்.. சேமிப்பில் வைத்துக் கொண்டேன்.. பின்னாடி எதுக்காச்சும் உதவும்..

நன்றிகள் கோடி பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தமைக்கு..

 
On February 8, 2009 at 4:27 PM , Sanjai Gandhi said...

ரொம்ப நன்றி ரம்யா.. நிச்சயம் ஒரு நாள் அரிசியை அருங்காட்சியகத்தில் மட்டும் பார்க்கும் காலம் வரும்..:)

//Better Nevr Than Late
Am I Correct ???//

இங்க்லிஷ் தெரிஞ்ச யாராவது டேன்ஸ்லேசனு பண்ணி சொல்லுங்கய்யா.. :))

 
On February 8, 2009 at 4:30 PM , Sanjai Gandhi said...

//கடலை, சோளம், எள் (ரொம்ப சுலபம்) பத்தி எழுதலாம்னு ஒரு எண்ணம் இருக்கு. நேரமிருப்பின் பண்ணிடலாம். தொடுப்பு குடுங்க..//

மிஸ்டர் பில்கேட்ஸ், இதெல்லாம் அழுகுணி ஆட்டம்.. :)

சோளம் , எள் எல்லாம் உழுது விதைத்துவிட்டால் நாம் கண்டுக்காம விட்டாலும் அற்புதமா விளைஞ்சி நிற்கும். அதுக்கு பிரமாதமா ஒன்னும் பண்ணத் தேவை இல்லை.. இதை பத்தி எழுத என்ன சாமி இருக்கு. கடலை ஓகே. ப்ரசஸ் அதிகம் தான்.. :)

 
On February 8, 2009 at 4:31 PM , Sanjai Gandhi said...

//இப்பத்தான் முதல் தடவையா படிச்சு முடிச்சேன்.. சேமிப்பில் வைத்துக் கொண்டேன்.. பின்னாடி எதுக்காச்சும் உதவும்..//
ஆஹா உத அண்ணே.. சேமித்து வைக்கும் அளவு இதுல சரக்கு இருக்கா? வளரிய சந்தோஷமாக்கும்.. :)

... இந்த பதிவு நீங்க எழுதிக் குடுத்ததான்னு எல்லாரும் கேட்கிறாங்க.. அவ்ளோ பெரிசா இருக்காம்.... :))

 
On February 16, 2009 at 10:26 PM , Anonymous said...

Naan kooda nel vayalaiyum kathirai saalaiyil payanikkumpothu paarthathuthaan..Thottu paarkka rombavae aasai aanalum mudiyaathu anumathi illamal..enn ooril nel vayal illai.. Veru maanilathukku sendra pothu paarthathuthaan :-(

Arumaiyaana thagaval :-)

 
On March 14, 2009 at 2:05 AM , SurveySan said...

சூப்பர்!!!

//அது முடிந்ததும் வயல் ஓரத்தில் இருக்கும் வரப்பை கேக் வெட்டுவதை போல மண்வெட்டியால் வெட்டியால் வெட்டி சரி செய்ய வேண்டும். ///

ஏன்?

//ஆனால் இவை எலலாம் விட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் கொஞ்சம் மங்கலான நினைவுகள் தான். //

ஏன்??

 
On March 20, 2009 at 6:27 PM , Sanjai Gandhi said...

தூயா.. இன்னாமே இளிப்பு? :)

----------------

புனிதா, நெல் கதிரை தொடறதுக்கு அனுமதியா? என்ன கொடுமை இது? வாங்க எங்க ஊருக்கு.. குதிச்சு விளையாடலாம்.. :)

 
On March 20, 2009 at 6:37 PM , Sanjai Gandhi said...

// SurveySan said...

சூப்பர்!!!

//அது முடிந்ததும் வயல் ஓரத்தில் இருக்கும் வரப்பை கேக் வெட்டுவதை போல மண்வெட்டியால் வெட்டியால் வெட்டி சரி செய்ய வேண்டும். ///

ஏன்?//

சர்வேஸ், பொதுவா வரப்புகள் எலி அல்லது பெருச்சாளி பொந்துகள் மற்றும் வரப்பில் வளரும் புற்களால் கொஞ்சம் உள்நோக்கி அதிக மண்ணுடன் இருக்கும். மேலும் நெல் பயிரிட சேறாக்கும் போது வரப்பு மேலும் பெருத்து விடும். அதனால் அதை ஒட்ட வெட்ட வேண்டி இருக்கும். அப்போ தான் வரப்பு ஓரத்திலும் நெல் பயிர் நட முடியும்.


//ஆனால் இவை எலலாம் விட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் கொஞ்சம் மங்கலான நினைவுகள் தான். //

ஏன்??

இப்போதும் எங்க வயலில் நெல் பயிருட்டு தான் இருக்கோம் சர்வேஸ். ஆனால் நான் வெளியில் இருப்பதால் விவசாய வேலைகளில் நேரடியாக பங்கெடுத்துக் கொள்ள முடிவதில்லை. அதனால் மங்கலாகவே நினைவிருக்கு. :)

 
On March 23, 2009 at 3:45 PM , Unknown said...

அருமையான பதிவு. பதியப்பட வேண்டிய கிராமத்து வாழ்க்கையில் இதுவும் ஒன்று.

//அப்பாலிக்கா இன்னா... நெல்லை அரவை மில்களுக்கு கொண்டு போய் அரைத்து கிடைக்கும் அரிசியை நாமும் தவிடை மாடுகளும் பங்கு போட்டுக்க வேண்டியது தான். :))//

அதெப்படி பொசுக்குன்னு சொல்லிட்டிங்க. நெல்லை வீட்டுக்கு கொண்டு வந்து தொம்பையிலே கொட்டி வைக்கணும். பிறகு தண்ணியிலே ஊற வைச்சு வேகவச்சி காய வச்சி அரைக்கணும். பச்சரிசியா இருந்தா நீங்க சொல்ற மாதிரி வெறுமனே காய வச்சி அரைச்சிடலாம்.

//அதற்கு "ஜாடை" வைப்பது என்று சொல்வோம்.//

எங்க ஊர்ல இதுக்கு வேற பேர். என்னன்னு சட்டுன்னு ஞாபகம் வர மாட்டேங்குது...

 
On March 24, 2009 at 7:02 PM , Anonymous said...

it is really very nice.