ஹாய் மக்கள்ஸ், நெல் பத்தி எழுதினது ரொம்ப பேருக்கு பிடிச்சிருந்தது. அவ்ளோ பெரிய பதிவு.. அதுவும் விவசாயம் பத்தின பதிவு படிப்பாங்களோ இல்லையோ.. சும்மா எழுதி வைக்கலாம்னு எழுதினேன். ஆனால் அமோக வரவேற்பு. ரொம்ப சந்தோஷம். அதே சந்தோஷத்தோட இப்போ பருத்தி பத்தி எழுதறேன்.
முதலில் நன்றாக உழுது நிலத்தை தயார் பண்ணிடுவாங்க. அப்புறம் விதை மையங்களில் பருத்திக் கொட்டை (விதை) வாங்கிவந்து நடுவோம்.
வயலின் இரு எல்லைகளுக்கும் எட்டும் வகையில் நீளமான ஒரு கயிறில் இரண்டு அடி இடைவெளிவிட்டு சிறு சிறு துணிகளை இடையில் திணித்துவைத்துக் கொள்வோம். கயிறின் இரண்டு முனைகளையும் ஆளுக்கொருவராகப் பிடித்துக் கொண்டு வயலின் இரண்டு எல்லைகளிலும் இருவர் நின்றுக் கொள்வார்கள். பருத்தி நட வேண்டிய வயல்களின் பரப்பளவுக்கு ஏற்ற மாதிரி கயிறுகளின் எண்ணிக்கையும் நடுபவர்களின் எண்ணிக்கையும் இருக்கும். கயிற்றில் இரண்டடிக்கு ஒரு துணி வைத்திருபப்து போல் கயிறு பிடித்திருப்பவர்களின் கையிலும் இரண்டடி நீளத்தில் ஆளுக்கொரு குச்சி வைத்திருப்பார்கள். அப்போது தான் எல்லாப் பக்கமும் இரண்டு அடி சீரான இடைவெளி இருக்கும். அவர்கள் கயிற்றை மாற்றும் போது அந்த குச்சிகளால் அளந்து அடுத்த இடத்தில் வைப்பார்கள். நடுபவர்கள் துணிகள் இருக்கும் இடத்தில் விதையை நடுவார்கள். மேலே உள்ள படத்தை பெரிசு பண்ணிப் பாருங்க. குறைந்தது 5 பேராவது பருத்தி நடுவார்கள். எல்லோரும் ஆளுக்கொரு சிறு பாத்திரத்தில் பருத்தி விதை வைத்துக் கொண்டு நடுவார்கள்.
சில ரகங்கள் ஒரு விதையும் சிலவை இரண்டு விதைகளும் நட வேண்டி இருக்கும். அதைத் தாண்டி “போக்கு” விதையும் நட வேண்டி இருக்கும். அது பிறகு. நஞ்சை புஞ்சை இரண்டிலும் பராமரிப்பு வேறு வேறாக இருக்கும். நீர்ப்பாசன வசதி இருக்கும் வயல்களில் பருத்தி விதை நட்டதும் வழக்கமான முறையில் நீர் பாய்ச்சுவார்கள். மேட்டு நிலம் என சொல்லப் படும் நீர்ப் பாசன வசதி இல்லாத வயல்களில் பருத்தி விதை நட்டதும் உடனே கையால் தான் நீர் ஊற்ற வேண்டும். சிறு வாளியில் நீர் எடுத்துக் கொண்டு தம்ப்ளர்கள் அல்லது சிறு சொம்புகள் கொண்டு நீர் ஊற்றுவோம். பருத்தி செடி ஓரளவு வளரும் வரை இப்படி நீர் ஊற்ற வேண்டும், மழைக் காலமாக இருந்தால் இது தேவை இல்லை.
[
முளைத்து சில நாட்களில்]
செடி முளைத்ததும் மொத்த வயலையும் கவனிக்கனும். அதுல சில விதைகள் முளைத்திருக்காமல் பொய்த்துவிடும். அந்த இடங்களில் எல்லாம் மீண்டும் நட வேண்டும். இதற்காகவே கொஞ்சம் விதைகள் மிச்சம் வைத்திருப்போம். இதர்கு தான் போக்குக் கொட்டை( விதை) என்று பெயர்.
பிறகு கொஞ்ச நாட்களில் பருத்தி செடியின் வளர்ச்சிக்காக யூரியா, உரக் கலவைகளை போட்டு வளர்க்க வேண்டும். பிறகு புழுக்கள் வர ஆரம்பித்துவிடும். அவைகளை அழிக்க பூச்சிக் கொள்ளி மருந்துகள் பயன்படுத்த வேண்டும். அதிக வீரியமிக்க மருந்துகளை தெளித்துவிட்டு வரும் போது வீட்டிற்கு வருவதற்குள்ளேயே வழியில் வாந்தி எடுத்து சுருண்டு விழுந்திருக்கிறேன். :). பிறகு யாராவது பார்த்து அரை மயக்கத்திலேயே கைத் தாங்கலாக அழைத்து வந்து வீட்டில் விடுவார்கள். எதோ வைத்தியம் எல்லாம் செய்வார்கள். அப்போதும் தெளியவில்லை என்றால் மருத்துவமனை தான். ;). ஒடம்பு முழுக்க விஷம் பரவி இருக்கு. மனசுல தான் இல்ல,.. :))
ஓரளவு செடி வளர்ந்ததும் செடியில் அடிப்பகுதியில் மண்ணை அதிகமாக சேர்த்துவிட வேண்டும். அப்போ தான் செடிக்கு வலு சேர்க்கும். வேரும் நன்றாக மண்ணிற்குள் பரவும்.
குறிப்பாக பூ மற்றும் காய் இருக்கும் கலங்களில் அதிக புழுக்கள் வந்துவிடும். அவைகளை அழிக்க அடிக்கடி மருந்து தெளிக்க வேண்டும். இரண்டு முறைகளில் மருந்துத் தெளிப்போம். ஒன்று கை கால் பயன்படுத்தி தெளிக்கும் மெஷின். இன்னொன்று முதுகில் மாட்டிக் கொண்டு பயன்படுத்தப் படும் பெட்ரோல் மூலம் இயங்கும் தெளிபபான்.
[பருத்திப் பூ]
பருத்தி வயல்களின் ஓரத்தில் அவரை, துவரை மற்றும் ஆமணக்கு போன்ற செடிகள் பயிரிட்டிருப்போம். பருத்தியோடு சேர்ந்து அவைகளும் வளர்ந்துவிடும். வீட்டிற்கு தேவையான அவரை , துவரை மற்றும் விளக்கெண்ணை இவைகளின் மூலம் கிடைத்துவிடும். கடையில் வாங்க வேண்டி இருக்காது.
[
பருத்தி வயல் ஓரத்தில் அவரை செடி]
பூக்கள் பிஞ்சியாக மாறும் போது அதில் நிறைய புழுக்கள் இருக்கும். அதை அழிப்பது கொஞ்சம் கஷ்டம். அதனால் அவைகளில் புழுக்கள் இருக்கும் பூக்களை மட்டும் பறித்துக் கொண்டு வந்து சாலையில் போட்டுவிடுவார்கள்.போகும் வரும் வாகனங்கள் எல்லாம் நசுக்கிவிட்டுப் போகும். :(
பிறகு காய்கள் பெரிதாகி வெடிக்க ஆரம்பித்துவிடும். அந்த சமயத்தில் ஆட்களை வேலைக்கு அழைத்து பஞ்சுகளை எடுத்து பைகளில் அடைத்து கொண்டு வந்து வீட்டில் கொட்டிவைப்போம்.
பின்னர் தேவையான அளவு பருத்தி சேர்ந்ததும் அவற்றை சந்தைக்கு கொண்டு செல்ல தயார் செய்யனும். இதில் நல்ல பஞ்சுகளுடன் விற்பனைக்கு உதவாத வகையிலான பஞ்சுகளும் இருக்கும். அதைத் தனியாகப் பிரித்தெடுக்கனும். இரண்டு கைகளிலும் கை நிறைய பஞ்சுகளை எடுத்து குலுக்கி உதறினால் விற்பனைக்கு உதவாத பஞ்சுகள் தனியாக அதே இடத்தில் கீழே விழும். அவைகள் கொஞ்சம் கூடுதல் எடைகளில் இருக்கும்.
பிறகு விற்பனைக்கு உகந்த பஞ்சுகளை கோணிப்பைகளில் அடைக்க வேண்டும். இது ஒரு கொடுமையான வேலை. சுமார் 10 கிலோ அளவுள்ள பஞ்சுகளை பையில் போட்டி கைவிரல்கள் கொண்டு நன்றாக குத்தி அடர்த்தியாக நிரப்ப வேண்டும். பிறகு இன்னும் கொஞ்சம் போட்டு காலை உள்ளே விட்டு பஞ்சுகளை நெருக்கமாக அடைக்கனும். பை உள்ளே எங்கும் சிறு இடைவெளிக் கூட இருக்கக் கூடாது. பிறகு பாதி பைக்கு மேல் பஞ்சு வந்ததும் 2, 3 உலக்கைகளைக் கொண்டு குத்துவோம். ஒரு பையில் பஞ்சு நிரப்ப குறைந்தது 4 பேராவது தேவை. அப்படி செய்தால் தான் ஒரு கோணிப்பையில் 50 கிலோ வரை பஞ்சுகளை அடைக்க முடியும். சந்தையில் ஒரு குவிண்டாலுக்கு( 100கிலோ) இவ்வளவு விலை என் ஏல முறையில் நிர்ணயிப்பார்கள்.
ஒரு சமயத்தில் ஒவ்வொருவரும் குறைந்தது 2 குவிண்டாலில் இருந்து அதிக பட்சம் 10 , 15 குவிண்டால் வரை சந்தைக்கு எடுத்து செல்வார்கள். அவர்கள் பருத்தி பயிரிட்டிருக்கும் பரப்பளவைப் பொறுத்தது இது. சந்தைக் கூடும் நாளுக்கு முந்தைய நாளில் எல்லோரும் பேசிவைத்துக் கொள்வார்கள். யார் எவ்வளவு பஞ்சு சந்தைக்கு கொண்டுவருவார்கள் என்று. பையில் அடைபப்தற்கு முன்பே தோராயமாக சொல்லிவிட முடியும் எவ்வளவு எடைவரை தேறும் என்று. மொத்தமாக சேரும் பஞ்சைப் பொறுத்து வாடகைக்கு லாரி பிடித்து சந்தைக் கூடுவதற்கு முந்தயை நாள் இரவே கிளம்பிவிடுவார்கள். அடுத்தநாள் காலையில் ஏலம் ஆரம்பிக்கும். பல பகுதிகளில் இருந்தும் பருத்தி வியாபாரிகள் சந்தைக்கு வந்திருப்பார்கள். இந்த சந்தைகள் கூட்டுறவுத் துறை மூலம் செயல்படும்.
ஏலம் ஆரம்பித்ததும் வரிசையாக வைத்திருக்கும் பஞ்சு மூட்டைகளின் இடையில் எங்காவது கத்தி வைத்து கிழித்து பஞ்சை எடுத்து வியாபாரிகள் பார்ப்பார்கள். ஏனெனில் பையின் மேல்ப் பகுதியில் தரமான பஞ்சும் உள்ளே தரமற்ற பஞ்சும் இருக்க வாய்ப்பு உண்டு. சிலர் தண்ணீர் தெளித்து பையில் பஞ்சை அடைப்பார்கள். எடை கூடுதலாக வர வேண்டுமென்று. இதை எல்லாம் சோதிக்கத் தான் இடையில் கிழித்துப் பார்ப்பது. பஞ்சின் தரத்தைப் பார்த்து வியாபாரிகள் ஆளுக்கொரு விலையில் கேட்பார்கள். இதில் யார் அதிக விலை கேட்கிறார்களோ அவர்களுக்கு விற்கப் படும். எல்லா பஞ்சு மூட்டைகளுக்கும் ஒரே மாதிரி விலை கிடைக்காது. அது அந்த மூட்டைகளில் இருக்கும் பஞ்சையும் விலை சொல்லும் வியாபாரியையும் பொருத்தது.
சில சந்தைகளில் அன்றே பண பட்டுவாடா நடக்கும். சில சந்தைகளில் ஒரு வாரம் கழித்து தான் பணம் கிடைக்கும். கூட்டுறவு சங்கம் மூலம் நடைபெறுவதால் பணம் பற்றிய பயம் இல்லை. அவர்கள் வியாபாரிகளிடம் பணம் பெற்றுக் கொண்ட பின் தான் பஞ்சு மூட்டைகளை கொடுப்பார்கள்.
பிறகு இவைகள் பஞ்சாலைகளுக்கு சென்று நூலாக மாறி உடையாக அவதாரமெடுத்து நமக்கு கிடைக்கிறது.
நெல் பற்றிய பதிவு ரொம்ப பெரியதாக போய்விட்டதால் உங்கள் நலன் கருதி “மிக” சுருகமாக சொல்லி இருக்கிறேன். ;)). சொல்வதற்கு இன்னும் கூட இருக்கு. ஆனால் இதுவே போதுமானது. சந்தேகங்கள் பின்னூட்டத்தில் தீர்த்து வைக்கப் படும். :)