Author: Sanjai Gandhi
•12:45:00 PM
அதிகாலை கிராம நினைவுகள் - 1குடிநீர் பிடிக்கும் வைபவம்...
.......... மழைக்காலங்களில் பெரிய கஷ்டம் எதும் இருக்காது.... ஆனால் கோடையில்..? குடிநீர்ப் பிரச்சனைப் பெருங்கொடுமை.. மனிதர்க்கு மட்டுமல்ல.. கால்நடைகளுக்கும்... ( அப்போ மனிதர்கள் எல்லாம் எதுல நடக்கறாங்க? :) )... ஊரில் ஒரு பொதுக் கிணறு இருக்கு. இப்போது அதை யாரும் பயன்படுத்துவது இல்லை.. பஞ்சாயத்து மூலம் வீதிக்கு வீதி குடிநீர் குழாய்கள் வந்திடிச்சி.
அப்போது குடிநீர் வேண்டுமானால் ஒரே தண்ணீர்த் தொட்டி தான். அதை சுற்றிலும் நான்கு புறமும் தலா 2 குழாய்கள் இருக்கும். கோடைக் காலங்களில் 5 மணிவாக்கில் ஆபரேட்டர் வந்து மோட்டார் போடுவார். நாங்க எல்லாம் 4 மணியிலிருந்தே அந்த தொட்டியை சுற்றி தவம் கிடப்போம். பலரும் அங்கே உட்கார்ந்துக் கொண்டேத் தூங்கி விழுவார்கள் :)...
ஆளுக்கு ஒரு குடம் என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை.. எல்லாரும் ப்ளாஸ்டிக் குடங்கள், சில்வர்க் குடங்கள், வெண்கலக் குடங்கள், பெரிய பெரிய அண்டா என்று வரிசையாக வைத்திருப்பார்கள். யார் முன்னாடி வராங்களோ அவங்க மொத்தமுள்ள குழாய்களிலும் 2 , 3 குடங்கள் வைத்து விடுவார்கள். ஒரு குடும்பத்தில் 2 , 3 பேர் வரையில் வந்திருப்பார்கள்... சிறியவர்கள் பெரியவர்கள் எல்லாம் இருப்பார்கள்.. வரிசைப்படி தான் தண்ணீர் பிடிக்க முடியும். கடைசியாக வரும் சோம்பேறிகளுக்கு தண்ணீர் கிடைக்காமலும் போயிடும். அவங்களுக்கு அதிகம் தண்ணீர் வைத்திருக்கும் யாராவது குடுப்பாங்க... கிராமங்களை பொருத்த வரையில் பெரும்பாலும் அனைவருமே உறவினர்களாகத் தான் இருப்பார்கள். அதனால் உதவிகள் கிடைக்கும்... அதைவிட அதிக உபத்திரவங்களும் கிடைக்கும்.. :)
தினம் தினம் இதே நிலைதான்... தினம் எதற்கு இவ்ளோ தண்ணீர்?.. பெரும்பாலும் எல்லார் வீட்டிலுமே மாடுகள் அல்லது ஆடுகள் இருக்கும். அவற்றிற்கும் தண்ணீர் வேண்டுமே.. கோடைகாலங்களில் அல்லது மழை பொய்த்துவிடும் சமயங்களில் விவசாயக் கிணறுகளிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்காது. அப்படியே இருந்தாலும் ஊரிலிருந்து சற்று தள்ளியே விவசாய நிலங்கள் இருக்கும்.. அங்கிருந்து எடுத்து வருவது ரொம்ப சிரமம்.. சிலர் மட்டும் சைக்கிள் கேரியரில் குடங்களை கட்டி தண்ணீர் எடுத்து வருவார்கள்..
அதன் பிறகு வீட்டிற்கு போய் பெண்கள் சமையல் வேலை பார்ப்பார்கள்..ஆண்கள் ஆடு மாடுகளை கவனிக்க ( தவிடு, புண்ணாகு, வைக்கோல் வைக்க), பால் கறக்க விவசாய நிலம் இருக்கும் ஏரியாவுக்கு போய்டுவாங்க.. அங்க தான் எறுமை மாடுகளுக்கு கொட்டகை ஆடுகளுக்கு "பட்டி" எல்லாம் இருக்கும்... தினமும் ஆட்டுப் பட்டியை திருப்ப வேண்டும். அதாவது இடம் மாற்ற வேண்டும்...
ஆட்டுப்பட்டி மூங்கிலால் பின்னப்பட்ட "படல்"கள் என்று அழைக்கப் படும் அமைப்புகளை ஒரு பக்கத்திற்கு குறைந்தது 2 நிறுத்தி 4 பக்கமும் சுவர் போல நிறுத்தி வைத்திருப்பார்கள். ஒரு படலையும் மற்றொரு படலையும் இணைக்க படலில் ஓரங்களில் நீட்டிக் கொண்டிருக்கும் மூங்கில்களில் வளயத்தை மாட்டிவிடுவார்கள். சிறு கயிறுகள் மூலம் படல்களின் மையப் பகுதிகளிலும் கட்டி வைபபர்கள்.
..... ஆட்டுப்பட்டி பற்றி விரிவாக அடுத்த பதிவு.. :))
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..
Author: Sanjai Gandhi
•7:16:00 PM
அதிகாலை 6 மணிக்கு முன்பே எழுந்துவிடுவோம். 4 மணியிலிருந்தே சேவல்கள் கூவ ஆரம்பித்துவிடும். கோழிகள் இல்லாத வீடு எதுவும் இருக்காது. எலலார் வீட்லையும் இருக்கும். அதனால் என்ன அசதியாய் இருந்தாலும் 6 மணிக்கு மேல் தூங்க முடியாது. காக்கா, குருவி , கோழி, சேவல், அணில் இன்னும் பல பல சத்தங்கள் அனைவரின் தூக்கத்தையும் கலைத்துவிடும்.
( பல திருட்டு கோழிகள் கையில் அகப்படாது. வீட்டு கூரையில் அல்லது அருகில் உள்ள மரங்களில் தான் தங்கும். மாலையில் ஓரளவு இருட்ட ஆரம்பித்ததும் வீட்டில் தங்கும் கோழிகள் நல்ல பிள்ளைகளாய் வீட்டிற்குள் வந்து வழக்கமாக அடைபடும் மூலையில் வந்து அமர்ந்துகொள்ளும். அதன் மேல் ஒரு மூங்கில் கூடை வைத்து மூடிவிடுவோம். கோழிகளின் எண்ணிக்கை பொருத்து சில பல கூடைகள் தேவைபடும். எங்கள் வீட்டில் ஒரே சமயம் 25 கோழிகளுக்கு மேல் எல்லாம் இருந்தது.சில அடங்கா கோழிகள் பக்கத்தில் மரத்திற்கு அல்லது வீட்டு கூரைக்குச் சென்றுவிடும். எதுவாயினும் இரவில் ஒரு முறை எண்ணப் படும். அவரவர் வீட்டுக் கோழிகள் பத்திரமாய் இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்வோம். சில ஜொள்ளு சேவல்கள் அது ரூட் விடும் கோழிகள் எங்கு தங்குதோ அங்கே போய்டும். அந்த கோழிக்கு சொந்த காரர்கள் சொல்லிவிடுவார்கள் இந்த சேவல் அவர்கள் வீட்டில் இருக்கு என்று. பிறகு நாம் போய் அதை பிடித்து வர வேண்டும். :P)
எழுந்தவுடன் காலை கடன்கள் முடித்து அல்லது முடிக்காமல் - அவரவர் அவசரத்தை பொருத்து :P - அடுப்புக்கு அருகில் வந்துவிடுவார்கள். பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் சோளக் கூழ் காய்ச்சுவார்கள். எங்க வீட்டில் எப்போதும் இருந்ததில்லை.. :(.. ஆகவே அருகில் இருந்த தாத்தா வீட்டிற்கு சென்றுவிடுவேன். தாத்தா ( அதாவது பாட்டி... கிராமங்களில் பாட்டி என்ற வார்த்தையே சமீக வருஷங்களில் தான் அறிமுகம் ஆயிருக்கு.. தாத்தா , பாட்டி எல்லோருமே எங்களுக்கு தாத்தா தான்) மாற்றடுப்பில் கூழ் காய்ச்சிக் கொண்டிருப்பார். எல்லார் வீட்டு அடுப்பிலும் 2 அடுப்பு இருக்கும். ஒன்று மெயின் அடுப்பு.. அதில் தான் விறகு வைக்க இடம் இருக்கும்.. இன்னொன்று மாற்றடுப்பு ( மாத்தடுப்பு) .. வலது புறம் இருக்கும்..மெயின் அடுப்பின் நுழைவாயிலில் அதிக விறகுகளை வைத்து எரிக்கும் போது அதிக நெருப்பு எரியும். மெயின் அடுப்பின் மீது வைத்திருக்கும் பாத்திரத்தின் வழியாக முழுமையாக வெளியேற முடியாமல் அது மாற்றடுப்புக்கும் போகும்.

மாத்தடுப்பில் சுடச்சுட கூழ் தயாராய்ட்டு இருக்கும். குளிர்காலமா இருந்தா அனலில் கைகாட்டி உள்ளங்கையை முகத்தில் வைத்துக் கொள்ளும் சுகமே தனி. கூழ் தயாரானதும் அதில் கொஞ்சம் மோர் கலப்பார்கள். அப்போது தான் சுவை இன்னும் கூடும். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மோர் கடைந்து வச்சிடுவாங்க.
அடுப்பில் கூழ் இருக்கும் போதே மோர் விட்டு கலக்கியதும் சுட சுட டம்ப்ளரில் ஊற்றிக் கொடுப்பாங்க. 4, 5, 6 டம்ப்ளர்கள் என்று உள்ளே போய்க் கொண்டே இருக்கும்.. கூழ் தீரும் வரை.. :).. குடித்து முடித்ததும் அப்படியே க்ளாசை வீசீவிட்டு ( வேலை முடிஞ்சதுல்ல :D.. எங்க வீட்ல ரொம்ப கண்டிப்பு - சின்ன வயசுல.. இப்போ இல்ல.. ஆனா தாத்தா வீட்ல , பெரியம்மா வீட்ல எல்லாம் ஓவர் செல்லம்.. யார் பேச்சையும் கேக்கறதில்லை...) வீட்டிற்கு வந்துவிடுவேன்... வந்து படிப்பு அல்லது படிப்பது போல் நடிப்பு.. :)
கூழ், மண் சட்டியில் தான் காய்ச்சுவாங்க... சோறு மற்றும் சில வறுக்கும் ஐட்டங்கள் தவிர மற்ற எல்லாம் மண் சட்டியில் தான். அதன் சுவை ரொம்ப அதிகம். பெரும்பாலான வீடுகளில் அவ்வப்போது தேவையான அளவு நெல் உரலில் போட்டு உலக்கையால் குத்தி அரிசியாக பிரிபபார்கள். அப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் சாமை அல்லது வரகு( கேள் வரகு இல்லை) சோறு தான். நெல்லு சோறெல்லாம் சில வீடுகளில் தான். ஆகவே நெல் சோறு என்றாலே அது கை குத்தல் அரிசிதான். மில்களில் அரைப்பது போல் வெண்மையாக இல்லாமல் கொஞ்சம் பழுப்பு நிறமாக இருக்கும்.

எல்லார் வீட்லையும் எருமை மாடு , பசு மாடுகள் நிச்சயம் இருக்கும். அதனால் எல்லார் வீட்லையும் மோர் இருக்கும். மோர் கலக்கும் முறையே ரொம்ப வித்தியாசமா இருக்கும்... சுவரை ஒட்டி ஒரு சிறிய கொம்பு நட்டிருப்பார்கள். அதில் ஒரு கயிறு கட்டி இருக்கும். மோர் கடைய "மத்து" இருக்கும். அந்த மத்தின் மையப் பகுதியில் கயிறு சுற்றுவதற்கு ஏற்றவாறு வடிவமைப்பு இருக்கும். அப்போது தான் கயிறை இழுக்கும் போது மத்து பாத்திரத்தின் அடிப் பகுதியில் முட்டாமல் இருக்கும். சுவர் ஓரம் நட்டு வைத்திருக்கும் கொம்பிற்கு அருகில் தயிர் இருக்கும் பாத்திரத்தை வைத்து அதில் மத்தை விட்டு அந்த கொம்பில் இருக்கும் கயிறுக்குள் மத்தை நுழைத்துகொள்ள வேண்டும். பிறகு மத்தில் இருக்கும் கயிறின் இரு முனைகளையும் இரு கைகளிலில் பிடித்து முன்னும் பின்னும் இழுக்க வேண்டும். அப்போ மத்து இடதும் வலதும் சுற்றும். தண்ணீர் கலந்த தயிரில் இருந்து சிறிது நேரத்தில் வெண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும். அதை கையில் எடுத்து வேறு பாத்திரத்தில் வைத்துவிட்டு மோர் இருக்கும் பாத்திரத்தை கூரை பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிறில் வைத்துவிடுவார்கள். தேவை படும் போது எடுத்துக் கொள்வார்கள். பூனை மற்றும் எறும்பின் தொல்லையில் இருந்து தப்பிக்க மோர் மற்றும் வெண்ணெய் தூக்கில் தொங்க விட்டுவிடுவார்கள்.
.............. இன்னும் வெளிச்சம் வரவில்லை.. அதிகாலை தொடரும்.. :)
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..