இனி என் வசிப்பிடம் blog.sanjaigandhi.com

Author: Sanjai Gandhi
•5:47:00 PM
மாதம் ஒருமுறை நிச்சயம் கூட்டாஞ்சோறு ஆக்கித் திண்போம். அப்போது தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் மிக மிகக் குறைவு. இருந்த ஒன்றிரண்டும் வெகு தூரத்தில் இருக்கும். நான் 16 கிமி தொலைவில் இருக்கும் ஒரு ஊரில் போய் 6,7ஆம் வகுப்பு படித்தேன். அப்போது டவுன் பஸ்ஸில் 60 பைசா தனியார் பஸ்ஸில் 80 பைசா டிக்கெட்( 1991 & 92). தினமும் சென்றுவருவதால் மாணவர்களுக்கு குறைந்த கட்டணம் தான். 20 பைசா குறைவு. :). பள்ளிக்கு மாதக் கட்டணம் 6ஆம் வகுப்பில் 60 ரூபாய் 7ஆம் வகுப்புக்கு 70 ரூபாய். :). 11 மற்றும் 12ஆம் வகுப்பும் தனியார் பள்ளியில்தான் படித்தேன். அப்போது காலாண்டுக் கட்டணம் 1250 ரூபாய். தினமும் அந்த பள்ளிக்கு சென்றுவர 80கிமீ பயணம் :(. காலை 5.45க்கு பஸ் ஏறணும். இப்போ அலாரம் வச்சாலும் அதை ஆஃப் பண்ணிட்டு 8 மணிக்கு தான் எழ முடியுது.. :)

சரி மேட்டர் அதில்லை. இவ்வளவு குறைவான கட்டணமாக தெரிந்தாலும் கிராமத்தில் இருந்து தனியார் பள்ளிக்கு போய் படிப்பவர்கள் 10 பேர் கூட இல்லை. எல்லாரும் எங்கள் ஊரிலும் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளிலும் தான் படிப்போம். நான் 1 முதல் 5 வரை எங்க ஊரில், 8,9 மற்றும் 10ஆம் வகுப்புகள் 2.5கிமீ தொலைவில் இருந்த அரசு பள்ளிகளில் படித்தேன். சைக்கிள் அல்லது நடந்து போவோம்.

அரசு பள்ளிகளில் படித்ததால் வீட்டுப் பாடம் என்ற கொடுமை எல்லாம் சுத்தமா இல்லை. எப்போதாவது அபூர்வமாக கொடுப்பார்கள். ஆனால் புதுப் பழக்கம் எதுக்குன்னு நாங்க ஒண்ணும் பண்ணாமலே போய் நின்னு செமத்தியா அடிவாங்கி வெளியே முட்டி போடுவோம். சில சமயங்களில் மைதானத்தில் கல்லும் மண்ணும் கலந்த கலவையில் முட்டி போடணும். மணிக் கணக்கில். கொஞ்ச நாளிலேயே பழகிப்போய்டும். அப்புறம் ஒண்ணும் உறைக்காது. :)

ஆகவே பள்ளி விட்டு வந்தால் எப்போதும் விளையாட்டு தான். எதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமை கூட்டாஞ்சோறுக்கு முடிவு செய்துக் கொள்வோம். தினமும் எல்லோருமே பார்த்துக் கொள்வோமே. ஆகவே செயற்குழு முடிவு உடனடியாக எல்லோருக்கும் தெரிந்துவிடும். அதற்காக தயாராகிவிடுவோம்.

காலை 11 மணிபோல் கிளம்பிவிடுவோம். பெரும்பாலும் ஊர் ஏரியில் தான் கூடுவோம். குறைந்தது 30 பேராவது இருப்போம். எல்லாருமே தேவையான பொருள் எதாவது எடுத்து வரவேண்டும் . வெறும் கை வீசி வருபவருக்கு இடமில்லை. யார் என்ன எடுத்து வரவேண்டும் என்பதை முன்னரே முடிவு செய்துக் கொள்வோம். கூட்டாஞ்சோறு என்பது தக்காளி சாதம் தான். பலரும் கூட்டாக சமைத்து உண்பதால் கூட்டாஞ்சோறு. வேறு எதும் இல்லை. மற்ற ஊர்களில் எப்படின்னு தெரியலை.

சிலர் அரிசி, சிலர் தக்காளி, சிலர் மிளகாய், ஒருவர் உப்பு, சிலர் பாத்திரங்கள், பாத்திரம் மூடி வைக்க தட்டு இன்னும் அதற்கு தேவையானவை எதுவோ அதெல்லாம் கொண்டு வருவார்கள். ஒவ்வொருவராக இடத்துக்கு வந்து சேர்வார்கள். எல்லாரும் வரும் வரை கதை அடிப்போம். பெரியவங்க ஒரு இடத்துல சேர்ந்தாக் கூட அவங்களுக்கு பேச மேட்டர் கிடைக்குமோ இல்லையோ, எங்களுக்கு பேச அவ்ளோ விஷயங்கள் இருக்கும். எல்லாரும் வந்ததும் ஆளாளுக்கு ஒரு வேலை ஆரம்பிப்போம்.

சிலர் அருகில் இருக்கும் கிணத்து மேடு அல்லது வயல்களின் எல்லைகளுக்காக போடப் பட்டிருக்கும் கல்கட்டுகளில் இருந்து கற்களைக் கொண்டுவருவோம். சிலர் அருகில் இருக்கும் மரங்கள் அல்லது வயல்களில் இருக்கு துவரம் மரங்களின் காய்ந்த கிளைகள் போன்றவற்றை உடைத்து

கொண்டு வரணும். அப்போதும் சமையல் பெண்கள் துறை தான். நாங்கள் எல்லாம் சேகரித்துக் கொண்டு வந்ததும் அவர்கள் சமையல் ஆரம்பிப்பார்கள். 30 பேருக்கு மேல் இருந்தாலும் 2 பாத்திரங்களில் சமைத்தால் போதும். பசியாறும் அளவுக்கெல்லாம் யாரும் சாப்பிட மாட்டோம். எல்லோருக்கும் சிறு சிறு கவளங்கள் தான்.

இரண்டு அல்லது மூன்று கற்களை வைத்து அதன் மீது பாத்திரத்தை வைத்து கற்களின் இடையில், கொண்டுவந்த காய்ந்த விறகுகள் அல்லது சிறு சிறு சுள்ளிகளை வைத்து தீ மூட்டுவோம். சில சமயங்களில் காய்ந்த விறகுகள் கிடைக்காது. ஓரளவு பச்சையாக இருக்கும் விறகுகள் தான் கிடைக்கும். அதை தீமூட்டுவது மிக சிரமம். ஆகவே அது அணையும் போதெல்லாம் ஊற்றி எரிய வைக்க மண்ணெண்ணயும் வைத்திருப்போம். காயாத விறகுகளை எரிக்கும் போது ஏராளமாக புகை வரும் . பக்கத்துல ஒரு பய நிக்க முடியாது.

முன்பே பாத்திரங்களில் அரிசி ,தக்காளி ,உப்பு, மிளகாய் என தேவையான அனைத்தும் கலந்து வைத்திருப்போம். அந்த பாத்திரத்தை கற்களின் மீது வைத்து சமையல் ஆரம்பமாகும். அருகில் பெண்கள் அமர்ந்து கரண்டிகளை வைத்துக் பாத்திரத்தில் கிண்டிக் கொண்டே இருப்பார்கள்.சோறு தயாராகும் வரை அருகில் இருக்கும் மரம் அல்லது புதர்களின் அடியில் அமர்ந்து கதை வளர்ப்போம். அங்கு போன சிறிது நேரத்திலேயே அந்த இடங்களில் இருக்கும் புதர்களில் அடியில் அமரும் அளவு இடம் தயார் பண்ணிடுவோம். சிலர் துண்டு விரித்து குட்டித் தூக்கமும் போட்டுவிடுவார்கள்.சிறிது நேரத்தில் கூட்டாஞ்சோறு தயார்.

இது வரை கூட்டாஞ்சோறின் ருசியில் வீட்டில் சாப்பிட்டதில்லை. தக்காளி சாதம் என்றால் நாம் வீட்டில் அல்லது உணவகத்தில் சாப்பிடுவது போல் இருக்காது. பொங்கல் போல் இருக்கும். ஆனால் சுவை மட்டும் மிக அதிகமாக இருக்கும். அந்த வழியே செல்லும் பெரியவர்கள் எல்லாம் கெஞ்சுவார்கள். அவர்களும் சிறு வயதில் இதன் ருசி அனுபவித்தவர்கள் தானே. பெரும்பாலும் கொடுக்க மாட்டோம். அங்கே இருப்பவர்களின் வீட்டச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கொடுக்க மாட்டோம். :)

கருவேல மரங்கள் போன்றவற்றின் முட்கள் பரவலாக கீழே இருக்கும். ஆனாலும் பெரும்பாலானவர்கள் செருப்பு போட்டிருக்க மாட்டார்கள். எல்லாருமே வாங்கிக் குடுத்த சில நாட்களிலேயே தொலைத்து விடுவோம். தொலைத்து விட்டு மீண்டும் கேட்டால் வீட்டில் எங்களைத் தொலைத்து விடுவார்கள். ஆகவே வெறுங்காலுடன் தான் முட்களிலும் வெயிலிலும் நடந்தாக வேண்டும். பெரும்பாலும் செருப்பு தொலையும் இடங்கள் கல்யாண வீடுகள் தான். கிராமத்து கல்யாணத்தை பற்றி பெரிய தொடரே எழுதலாம். :).. ஏழை வீடோ பணக்காரர் வீடோ , அது குறைந்த பட்சம் 3 நாள் திருவிழா. விரைவில் எழுதிடுவோம்.

சமையல் நடந்துக் கொண்டிருக்கும் போதே நாங்கள் போய் அருகில் இருக்கும் வாழை மரங்களில் அல்லது ஆமணக்கு மரங்களில் இலைகளை பறித்து வருவோம். பெரும்பாலும் ஆமணக்கு இலை தான். வாழை இலை கிடைப்பது கொஞ்சம் அரிது. சமையல் முடிந்ததும் இலையை கையில் ஏந்தி வட்டமாக அமர்ந்துவிடுவோம். எல்லாருக்கும் சரியான அளவில் சிலர் பரிமாறுவார்கள். நான்கு ஐந்து மணி நேரங்களுக்கு அங்கு பொழுதைக் கழிப்போம். அங்கேயே அஞ்சாங்கல், கோட்டிப் புல், கபடி என எதாவது விளையாடிக் கொண்டிருப்போம்.பிறகு 3 அல்லது 4 மணிக்கு மேல மாடு , எருமை மேய்க்கும் கடமை இருக்கும் என்பதால் அத்துடன் சபை கலைந்துவிடும்.

எல்லார் வீட்டிலும் எருமைகள், மாடுகள் இருக்கும் என்பதால் விடுமுறை நாட்களில் நாங்கள் தான் அதை மேய்க்க வேண்டும். காலை மாலை என இரண்டு வேளையும் சாணி அள்ளி அருகில் சாணம் கொட்டி வைத்திருக்கும் இருக்கும் இடத்தில் கொட்ட வேண்டும். மிகப் பெரும் இயற்கை உரம். நிலமில்லாதவர்கள் அல்லது குறைவான நிலம் வைத்திருபப்வர்கள் அதிக விலைக்கு இந்த “எரு”வை விற்பார்கள். இரண்டு வேளை அவைகளுக்கு தவிடு, புண்ணாக்கு கலந்த தண்ணீர் கொடுக்க வேண்டும். அதுக்கு தான் ’தண்ணிக் காட்றது’ அப்டின்னு பேர். இவைகளை பராமரிப்பதையே தனிப் பதிவாக போடலாம். அம்புட்டு மேட்டர் இருக்கு. :)

(..இதுல தான் தண்ணி காட்டணும்.. தீனி அல்லது குளுத்தி என்று பெயர்..)








கூட்டாஞ்சோறு லொக்கேஷன்ஸ் :-)

..தலைகீழ இல்ல... தண்ணீரில் எதிரொளிக்கிறது..



இது போன்ற புதர்கள் அல்லது கருவேல மரத்தடிகளைத்தான் உட்காரும் அளவு மாற்றிவிடுவோம். மூன்றுமே அதே ஏரியில் எடுத்த படங்கள் தான். போட்டோஷாப் ஜிகினா வேலைக்கு ஏற்ற மாதிரி அழகாவும் அசிங்கமாவும் தெரியலாம்..
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..

Author: Sanjai Gandhi
•8:49:00 PM
எச்சரிக்கை : இந்தப் பதிவு ஏற்கனவே என்னோட இன்னொரு வலைப்பூவில் வெளியிட்டது தான். பலரும் அதில் படித்திருப்பிர்கள்.இது கிராமத்து நினைவுகளுக்கு பொறுத்தமா இருக்கும் பதிவு என்பதால் இப்போது இங்கும் பதிவிடுகிறேன். அங்கு படிக்காதவர்கள் மட்டும் இந்த கொஞ்சூண்டு பெரிய பதிவை இங்கு படித்து பயனுறவும். ரொம்ப கஷ்டமா இருந்தா உங்கள வசதிக்கு ஏற்ற மாதிரி 4 அல்லது 5 பாகங்களாக படித்துக் கொள்ளவும். :))

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

2008ஆம் ஆண்டு பொங்கலுக்கு எங்க சித்தப்பா ஆதித்யனுக்கும் இனியாவுக்கும் ( சித்தப்பா பசங்க ) இது நெல்லு, இது கரும்பு, இது மஞ்சள்னு (இங்கிலிபீச்ல தான்) சொல்லிகிட்டு வந்தாரு. (அந்த குட்டிபசங்க பொறந்து வளர்ந்துட்டு இருக்கிறது சென்னைல தான். பண்டிகைகளுக்கு மட்டுமே எங்க வீட்டுக்கு வருவாங்க.).

அப்போ எங்கப்பா சொன்னாரு " இவங்களுக்கு அதிர்ஷடம் இருக்குடா.. இத எல்லாம் நேர்ல பாக்கிற குடுப்பனையாச்சும் இருக்கு. இவங்க பசங்களுக்கு இதை எல்லாம் இவங்க எதுனா மியூசியத்துல தான் காமிப்பாங்க".. விவசாயத்தின் நிலை இது தான். :(

அப்போ இருந்து ஒவ்வொரு மாதமும் ஊருக்கு போகும் போது தொட்டத்துல இருக்கிற பயிர்களை படமா புடிச்சி தள்றேன். :))... அதுல இருந்து ஒரு பாடம்... :)

எல்லோரும் அரிசிசோறு சாப்பிடறிங்களே.. அந்த அரிசி எபப்டி விளையுதுனு தெரியுமா?. கிராமத்து மக்களுக்கு நல்லா தெரியும். நகரத்திலேயே பிறந்த வளர்ந்தவர்களுக்கு?.. தெரியாது இல்ல.. ;).. இதோ இப்போ தெரிஞ்சிக்கலாம்.:)

முதலில் எவ்வளவு பரப்பளவில் நெல் பயிரவேண்டும் என்பதை முடிவு செய்துக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கு தேவையான விதை நெல்லை எடுத்து ஒரு கோணிப்பையில் போட்டு அதை தண்ணீர் தொட்டியில் ஊற வைக்கவேண்டும். ஊற வைத்த சில தினங்களில் அந்த நெல்மணிகள் முளைவிட ஆரம்பிக்கும். நெல்லை ஊறவைத்தவுடன் அதை விதைப்பதற்கு தேவையான அளவில் நிலத்தை உழுது அதை சேறாக்கி சேறை சமன்படுத்தி தயாராய் வைக்க வேண்டும்...

இந்த படத்தில் சாதாரனமாக உழுகிறார். இதே வயலில் நன்றாக நீர் நிரப்பி உழுதால் அந்த வயல் சேறாகி விடும். அதற்கு "ஜாடை" வைப்பது என்று சொல்வோம். நாங்க எல்லாம் இதில் தான் ஏர் ஓட்டக் கற்றுக்கொள்வோம். ஏன்னா ஜாடை வைப்பதில் வயலை நன்றாக சேறாக வேண்டும் என்பது தான் நோக்கம். அதில் சீராக ஏர் ஓட்ட( உழுதல்) வேண்டும் என்று அவசியம் இல்லை. முதலில் கற்றுகொள்ளும் போது நேராக உழ முடியாது. கலப்பையின் கைப்பிடிக்கு "மோழி" என்று பெயர். மோழியை சரியாக பிடிக்க வில்லை என்றால் நேராக உழ முடியாது. எருதின் கால்கள் சேதமாகவும் வாய்ப்பு இருக்கு. முதலில் ஒரு அனுபவசாலியுடன் சேர்ந்து மோழியை பிடித்து தான் பழக வேண்டும். நெல் பயிர் தவிர மற்ற பயிர்கள் அனைத்திற்கும் நேராக உழ வேண்டும். அதில் பாத்தி கட்டுதல் , வாய்க்கால் போடுதல் என சில வேலைகள் இருக்கும்.
( ஏர் உழுவதற்கு பொதுவாக எருதுகள் தான் பயன்படுத்துவார்கள். இப்போது எருதுகள் பார்ப்பது அரிதாகிவிட்டது. மேலே உள்ள படத்தில் இருப்பது எருதுகள் அல்ல. பசுமாடுகள். பசுமாடுகளுக்கு எருதுகள் போல் வலிமை கிடையாது. இப்போது எருதுகள் இல்லாததால் பசுமாடுகள் பயன்படுத்துகிறார்கள். பசுமாடுகளை பழக்கப் படுத்துவது படு சிரமமான காரியம். இப்போது 99% ட்ராக்டர்கள் தான் உழுவதற்கு பயன்படுத்துகிறார்கள்.).... ச்சோ..ச்சோ என்றால் இடது எருதும், பா..பா என்றால் வலது எருதும் நமக்கு கட்டுபடும். :))... இதற்கு சில வாய் சுழிப்பு மூலம் வரும் ஓசைகளும் இருக்கு. :)).. எல்லாம் ஒரே பவாய் போட்டால் பதிவு பெரிதாகிவிடும். தனி பதிவாய் போடுகிறேன்.


(நெல் விதைத்தான் இப்படி தான் அடர்த்தியாக வளரும்.)
நெல்மணிகள் முளைவிட்ட உடன் அவைகளை எடுத்து சேறாக்கிய வயலில் விதைக்க வேண்டும். அடர்த்தியாக விதைக்க வேண்டும். பெரும்பாலும் விதை நெல் சரியான அளவில் இருக்கும். சில சமயங்களில் கொஞ்சம் மிச்சமாகி விடும். அதை பரவலாக அந்த வயலிலேயே தூவி விடலாம். அதற்கு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 20 முதல் 25 நாட்களில் நன்றாக நெல் பயிர் வளர்ந்துவிடும். விதைபயிர் வளர்ந்துக் கொண்டு இருக்கும் போதே அந்த பயிர் நடுவதற்கு தேவையான பரப்பளவில் ஜாடை வைக்க வேண்டும். அதாவது வயலில் நீர் நிரப்பி, அதில் எருது அல்லது ட்ராக்டர் ( இதற்கு இரும்பினால் ஆன உயரமான சக்கரங்கள் ட்ராக்டரின் பின் சக்கரமாக பயன்படுத்த வேண்டும்) மூலம் உழுது நங்உ சேறாக்க வேண்டும். அதில் "எரு"( மக்கிய சாணம்), சில வகை இழை தலைகள் போட்டு அதன் மீது மீண்டும் ட்ராக்டர் மூலம் நசுங்க வைத்து சேறுடன் கலக்க செய்ய வேண்டும்.

அது முடிந்ததும் வயல் ஓரத்தில் இருக்கும் வரப்பை கேக் வெட்டுவதை போல மண்வெட்டியால் வெட்டியால் வெட்டி சரி செய்ய வேண்டும். வரப்பு தகறாரு கேள்வி பட்டிருப்பீங்க இல்ல. அது இதனால் தான் ஆரம்பிக்கும். :))... ஒவ்வொரு முறை வெரப்பை வெட்டும் போதும் அதன் தடினன் குறந்துக் கொண்டே வரும். அதனை ஒட்டிய வயலுக்கு சொந்த காரர் அவர் பகுதியில் வெட்டிக் கொண்டே இருப்பார். இந்த பக்கம் இருப்பவர் இவர் வசதிக்கு வெட்டி கொண்டே வருவார். ஒரு குறிபிட்ட சாகுபடிக்கு பிறகு வரப்பு மிகக் குறுகியதாகிவிடும். அதன் மீது நடப்பதற்கு கூட இடமில்லாமல் போய்விடும். அப்போது தான் வரப்பு தகறாரு வரும். :P... எங்க ஊரில் மண்வெட்டிக்கு "சனுக்கை" என்று பெயர். வரப்பு வெட்டுவதற்கு "அண்டை வெட்டுதல் அல்லது அண்டை கழித்தல்" என்று பெயர்.

பிறகு ஜாடையை "பரம்பு" ( T யை தலைகீழாக கவிழ்த்த மாதிரி ஒரு கருவி. மரத்தால் ஆனது) கொண்டு எருது அல்லது ட்ராக்டரில் இணைத்து சேறை சமன் படுத்த வேண்டும். மேடு பள்ளாம் இல்லாமல் செய்ய வேண்டும். அப்போது தான் நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும்.

பிறகு முதலில் விதைத்து பயிரான நெல் பயிர்களை பிடுங்கி அதை சிறு சிறு கத்தையாக கட்ட வேண்டும். அதை கட்டுவதற்கு வாழை நார் உபயோகிப்போம். கத்தையாக கட்டிய இந்த பயிர்களை கொண்டு சென்று பயிர் நடுவதற்காக உருவாக்கிய வயல்களில் சீரான இடைவெளியில் வீசிவிட வேண்டும். பிறகு ஆட்கள்( பெரும்பாலும் பெண்கள், ஆர்வக் கோளாரில் சில சமயங்களில் நானும்:) அந்த ஜாடையில் இறங்கி ஆளுக்கு ஒன்று அல்லது ஒன்னரை மீட்டர் இடைவெளியில் இடம் பிடித்துக் கொண்டு பயிர் நட ஆரம்பிப்பார்கள். பயிர் நடும் முறை கிணற்று பாசனம் செய்யும் இடங்களில் ஒரு மாதிரியும் ஆற்று பாசனங்கள் இருக்கும் இடங்களில் ஒரு மாதிரியும் இருக்கும். எங்க பகுதியில் கிணற்று பாசனம் மட்டுமே . ஆகவே அடர்த்தியாக நடுவார்கள். ஆற்று பாசனம் இருக்கும் இடங்களில் அதிக இடைவெளியில் நடுவார்கள். பரிர் நடும் போது காலால் ஏற்படும் குழிகளை கைய்யால் சமன் படுத்திக் கொண்டே வருவார்கள். இல்லை எனில் அந்த குழிகளுக்கும் சேர்த்து தேவை இல்லாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் பற்றாக் குறை காலங்களில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பயிர் சற்று வளரும் வரை மிதமான அளவே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மழை வந்து விட்டால் வயல் முழுதும் நிரம்பிவிடும். அப்போது வரப்பில் சிறிய உடைப்பு உண்டாக்கி தேவையில்லாத தண்னீரை வெளியேற்ற வேண்டும். இல்லை எனில் பயிர் முழுதும் நீரில் மூழ்கி சூரிய ஒளி இல்லாமல் அழுகி விடும். அதாவது செத்துவிடும்.

வயலில் பயிர் நட்டு 40 அல்லது 45 நாட்களில் இந்த படத்தில் உள்ளது போல் வளர்ந்திருக்கும். இந்த கால கடங்களில் பயிரை பூச்சிகள் தாக்கும். எனவே பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்க வேண்டும். அவ்வப்போது யூரியா, உரம் போன்றவற்றை இட வேண்டும். பூச்சிகொல்லி மருந்தடிக்கும் முறை பற்றி தனி பதிவு போடுகிறேன்.
இந்த படத்தில் வெள்ளையாக தெரிவது ட்யூப்லைட்டுகள். கொக்குகளிடம் இருந்து பயிரை காக்க இந்த தந்திரம். வெயிலின் இது மின்னுவதால் அவைகள் பயத்தில் வராது. இல்லை என்றால் பெரும் படைகளாக வந்து பயிரை மிதித்து நாசம் செய்துவிடும். நெல் கதிர்கள் உறுவாக ஆரம்பித்ததும் குருவிகளின் வேட்டையிலிருந்து காக்க வயல்களின் குறுக்கே கயிறுகள் கட்டி அதில் சிரு சிறு மணிகள் தொங்க விடுவோம். குருவிகள் அந்த கயிறின் மீது அமர்ந்தால் கயிறின் அசைவில் அந்த மணி ஒலி எழுப்பும். உடனே குருவிகள் பறந்துவிடும்.

மணிகளுக்கு பதில் ஆடியோ கேசட்டுகளில் உள்ள டேப்பை எடுத்து வயல்களின் குறுக்கே கட்டிவிடுவோம். காற்றில் அவைகளில் வித்தியாசமான பயமுருத்தும் வகையிலான ஒலி கிடைக்கும். இதனால் குருவிகள் வராது. இப்படியும் நெல்லை காக்கலாம். இன்னும் சிலர் பெரிய தகர டின்களை வைத்து குருவிகள் வரும் போது அதை பலமாக அடித்து அவற்றை விரட்டுவார்கள். "கவட்டை" எனும் கல் எறியும் கருவி மூலமும் குருவி விரட்டலாம்.

கவட்டை - -----( )------ கைகள் இரண்டையும் கோர்த்துக்கொண்டு உள்ளங்கையை குவித்துக் கொண்டால் ஒரு ஷேப் கிடைக்கும்ல.. அதன் இரண்டு முனைகளையும் கயிற்றால் நம் கையின் நீளத்துக்கு கட்டிகொண்டால் எப்படி இருக்குமோ அது தான் கவட்டை. உள்ளங்கை போன்ற பகுதியில் சில சிறு கற்களை வைத்து கயிற்றின் 2 முனைகளையும் ஒரு கைய்யில் பிடித்துக் கொண்டு வேகமாக சுழற்றி பின் ஒரு முனையை மற்றும் விட வேண்டும். அதில் இருக்கும் கற்கள் அனைத்தும் பல திசைகளில் தூரமாக சென்று விழும். இதனால் குருவிகள் பறந்துவிடும்.

60 முதல் 70 நாட்களுக்குள் இந்த நிலை வந்துவிடும். நெல்மணிகள் பழுப்பு நிறம் வர ஆரம்பித்துவிடும். 3 மாதம் முடியும் போது அருவடைக்கு தயாராய் இருக்கும். பல் சக்கறம் போன்ற அமைப்புடன் இருக்கும் சிறு சிரு அரிவாள்கள் கொண்டு தரையிலிருந்து நான்கு அல்லது 5 அங்குல உயரத்தில் பயிர்களை அறுக்க வேண்டும். கதிர் அறுப்பதற்காகவே ஸ்பெஷலாக சாணை பிடிப்பார்கள். அப்போது தான் ஒரே வீச்சில் அறுக்க முடியும். பயிர் நடுவதற்கு எப்படி சீரான இடைவெளியில் ஆட்கள் நடுவார்களோ அதே மாதிரி தான் இதையும் செய்வார்கள். அறுவடைக்கு தயாராய் இருக்கும் நெல் பயிர் "தாள்" என்று அழைக்கப் படும். அவைகளை அறுத்து கத்தைகளாக கட்டுவது "சுமை" கட்டுவது என்று சொல்வோம். ஒவ்வொரு வயலிலும் எத்தனை சுமை என்பது எண்ணப் படும் . அதை வைத்தே எத்தனை மூட்டை நெல் கிடைக்கும் என்பதை கணிக்கலாம். பிறகு இந்த சுமைகளை மாட்டு வண்டியில் அல்லது ட்ராக்டரில் ஏற்றி களத்திற்கு கொண்டு செல்வோம். களம் என்பது கதிர் அடிகக்வும், தாணியங்களை உலர்த்தவும் ( காய வைக்க) பிரத்தியேகமாக தயாரிக்கப் படும் இடம்.
இது கதிர் அறுத்த நெல் வயல்.

கதிர் அடிக்கும் முறை -
பழையது : சுமைகளை பிரித்து நெல்மணிகள் மேல்நோக்கி இருக்குமாறு களத்தில் வட்ட வடிவில் அடுக்க வேண்டும். அதன் மீது 2 அல்லது 3 ஜோடி எருதுகளைக் கொண்டு மிதிக்க வைக்க வேண்டும் . இதன் மூலம் 95 சதவீத நெல் மணிகள் உதிர்ந்துவிடும். மிச்சம் மீதி இருப்பதை மனித சக்தி மூலம் பிரித்தெடுக்கனும். அதற்கு ஆடுகள் அடைக்க பயன்படும் பட்டிகள் கட்ட பயன்படுத்தப் படும் பிளந்த மூங்கில்களால் பின்னப் பட்ட "படல்கள்" பயன்படுத்தப் படும். அந்த படல்களை 2 ஊன்றுகோல்கள் மூல சாய்வாக நிற்க வைத்து அதன் மீது நெற்பயிர்களை சிறு சிறு கத்தைகளாக எடுத்து ஓங்கி அடிக்க வேண்டும். இப்போது மிச்சம் மீதி ஒட்டி இருந்த நெல்மணிகளும் உதிர்ந்துவிடும். பிறகு வைக்கோலை மட்டும் எடுத்து காலி வயல்கள் அல்லது காலி இடத்தில் பரவலாக போட்டு உலர்த்த வேண்டும். பிறகு கீழே இருக்கும் நெல்களை முறங்களில் அள்ளி உயரமாக பிடித்துக் கொண்டு லேசாக அசைத்தவாறே நெல்மணிகள் கீழே விழுமாறு செய்ய வேண்டும். இதற்கு லேசான காற்றாவது வீச வேண்டும். அப்போது தான் பதர்கள் காற்றில் பறந்து சற்று தூரமாக விழும். நல்ல மணிகள் மட்டும் கீழே ஓரிடத்தில் விழும். இதை பலர் செய்ய வேண்டும். நெல்லை அள்ளி வேகமாக வீசுவதன் மூலமும் இதை செய்யலாம். பிறகு அவற்றை கோணிப்பைகளில் கட்டி சேமிக்க வேண்டியது தான். நெல்லின் அளவை பொறுத்து விற்பதும் வீட்டிலேயே வைபப்தும் முடிவு செய்யப் படும்.

புதிய முறை : கதிர் அடிக்கும் இயந்திரத்தின் மெல் பகுதியில் நெல்பயிரை எந்திரத்திர்குல் செலுத்தும் பகுதி இருக்கும். அந்த இடத்தில் உட்கார்ந்துக் கொண்டு நெல்மனிகள் முன்புறம் இருக்கும் வகையில் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே செலுத்த வேண்டும். கீழே இருந்து ஒருவர் சுமைகளை எடுத்துக் கொடுக்க வேண்டும். அருகில் இருந்து ஒருவர் சுமைகளை கட்டி இருக்கும் நார்களை அறுத்து விடுவார். உள்ளே சென்ற நெல்பயிர் கதிர்கள் தனியாக எந்திரத்தின் பக்கவாட்டில் உள்ள சிறு பகுதிவழியாக நெல்மணிகளாகவும் பின்புறம் உள்ள பெரிய பகுதி வழியாக வைக்கோலும் பதர்களும் வரும். நெல்மணிகளை சிறு சிறு பாத்திரங்கள் கொண்டு சேமித்து அவற்றை கோணிப் பையில் அல்லது வீட்டின் ஒரு பகுதியில் போட வேண்டும். பின் பகுதியில் ஒரு கயிற்றுக் கட்டில் இனைக்கப் பட்டிருக்கும். அதன் மீது தான் வைக்கோல் வெளியேறும். அங்கே 2 பக்கமும் 2 பேர் நின்றுகொண்டு வரும் வைக்கோலை அலசி அலசி வீசுவார்கள். ஏனென்றால் வைக்கோலுடன் ஒட்டிகொண்டு வரும் நெல்களை மற்றும் ம்பதர்கள் கயிற்றுக் கட்டிலுக்கு கீல் விழச் செய்வது தான் நோக்கம். பதர்கள் மாடுகளுக்கு தவிடு அரைக்க உதவும். இனி யாரையும் பதர்களே என திட்டாதிர்கள். பதர்களும் பயன்படும். :) இந்த வகையில் கதிர் அடிக்க .. சுமைகளை கொடுக்க ஒருவர், அவற்றின் கட்டுகளை அறுக்க ஒருவர், சுமைகளை உள்ளே அனுப்ப ஒருவர், நெல்மணிகளை அள்ள ஒருவர், கோனிப்பை பிடிக்க ஒருவர், வைகோலை அலச இருவர், அலசிய வைக்கோலை காலி இடங்களுக்கு இழுத்து செல்ல இருவர் ( கை வலி உயிர் போகும்), அவற்றை பரவலாக பரப்ப ஒருவர் அல்லது இருவர் என குறைந்தது 10 பேர் வெண்டும். இற்கு கூலிக்கு ஆள் வருவது அரிது. ரொம்பவே கொடுமையான காரியம் இது. எனவே எங்களுக்கு இந்த வேலைக்கு வரவங்களுக்கு , அவங்க கதிர் அடிக்கும் போது நான் போய் செய்ய வேண்டும். இதே போல் ஷேர் பண்ணிப்போம். இதர்கு "மொய்" ஆள் என்று பெயர் :).அதாவது பரஸ்பர உதவி. இந்த மொய் ஆள் மேட்டர் எல்லா தோட்ட வேலைகளிலும் இருக்கும்.

பழைய முறையோ புதிய முறையோ... எதுவயினும் வெயில் அடிக்கும் போது செய்ய மாட்டோம். இரவிலும் இளங்காலை வேளையிலுமே செய்வோம். இது உடலை கிழிக்கும் செயல் என்பதால் வெயிலில் செய்தால் எரிச்சல் தாங்க முடியாது. இதை முடித்தவுடன் குளிர்ந்த நீரில் கண்டிப்பாக குளிக்க வேண்டும். அது கடுமையான குளிர்காலமாக இருப்பினும். இரவு 1 மணி 2 மணி வரையிலும் கூட இதை செய்ய வேண்டி இருக்கும்.

... இப்போது பழைய முறை முற்றிலும் அழிந்துவிட்டது. புதிய முறை மட்டுமே இருக்கு...

அப்பாலிக்கா இன்னா... நெல்லை அரவை மில்களுக்கு கொண்டு போய் அரைத்து கிடைக்கும் அரிசியை நாமும் தவிடை மாடுகளும் பங்கு போட்டுக்க வேண்டியது தான். :))


குறிப்பு : இந்த பதிவில் சாகுபடி முறை ஓரளவுக்கு சரியாக இருந்தாலும் இதில் குறிபிட்டிருக்கும் வளர்ச்சி காலங்கள் ஒவ்வொரு ரகத்திர்கும் ஒரு மாதிரி மாறும். சில ரகங்கள் 3 மாதத்தில் மகசூல் குடுக்கும். சிலது 4 மாதம் சிலது 5 மாதம் என மாறுபடும். இப்போது நாற்று நட, கதிர் அறுக்க, கதிர் அடிக்க எல்லாவற்றும் எந்திரம் வந்தாச்சி.
................க்ளாஸ் ஓவர்.. எல்லாரும் ஊட்டுக்கு போங்கோ.. :))


பெரிய பதிவாதலால் வழக்கம் போல் எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும். :).. ஏர் ஓட்டும் முதல் படம் பக்கத்து வயலில் எடுத்தது. மற்ற்வை எங்க வயல்கள். இதில் விவரித்திருக்கும் அனைத்து வேலையும் செய்திருக்கிறேன். எல்லாம் என் அனுபவமே பழய முறை கதிர் அடித்தல் உட்பட. ஆனால் இவை எலலாம் விட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் கொஞ்சம் மங்கலான நினைவுகள் தான். அந்த மங்கலான நினைவும் மங்கி போவதற்கு முன் பிரதி எடுத்துவைக்கும் ஒரு சின்ன முயற்சியே இது. :)

பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..