இனி என் வசிப்பிடம் blog.sanjaigandhi.com

Author: Sanjai Gandhi
•4:57:00 PM
தினமும் மாலை நேரங்களில் விளயாடும் விளையாட்டு இது... மாலையில் 15 பேருக்கு மேல் ஒன்று கூடினால் இந்த விளையாட்டு ஆரம்பித்துவிடுவோம். இது ஒளிந்துவிளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. ஒருவர் தவிர மற்ற அனைவரும் எங்காவது ஒளிந்துக் கொள்ளவேண்டும். அந்த ஒருவர் ஒளிந்துகொண்டிருக்கும் பிறரை கண்டுபிடிக்க வேண்டும். ஆண் பெண் எல்லோருமே இதில் இருப்பார்கள்.

முதலில் கண்டுபிடிப்பவரை முடிவு செய்ய வேண்டும். யார் கடைசியாக வந்து கலந்துக் கொள்கிறார்களோ அவர் தான் கண்டுபிடிப்பாளர். அதாவது இளிச்சவாயன்:). அப்படி எவனும் மாட்டாமல் எல்லோரும் ஒரே சமயத்தில் மாட்டினால், விளையாட்டில் கலந்துக் கொள்ளாத யாரையாவது கண்ணைக் கட்டி அவனுக்கு திசை தெரியாதவாறு சுற்றி விட வேண்டும். விளையாட்டில் கலந்து கொள்ள வேண்டிய அனைவரும் அவனை சுற்றி நின்றுகொள்வார்கள். யாரும் அசையக் கூடாது. கண்ணைக் கட்டிக் கொண்டவன் தோராயமாக வந்து யாரையாவது தொடுவான். தொடப் பட்டவன் மாட்டிக் கொள்வான்...

இப்போது ஆட்டம் ஆரம்பம். மாட்டிக்கொண்டவன் ஒரு மறைவான இடத்திற்கு சென்று ( படத்தில் இருக்கும் மரத்திற்கு பின்னாடி ) 50 வரை சத்தமாக எண்ண வேண்டும். 45..46..47..48..49..50 வருகிறேன்ன்ன்ன்ன்... என்று சத்தமாக அறிவித்துவிட்டு அந்த மறைவிடத்தில் இருந்து வெளிப்பட வேண்டும். அதற்குள் மற்றவர்கள் எல்லோரும் ஆளுக்கொரு இடமாக ஒளிந்துக் கொள்வார்கள்.

ஒளிந்துக் கொண்டவர்கள் எல்லோரையும் கண்டு பிடிக்க வேண்டும். கண்டு பிடித்ததும் கண்டுபிடிக்கப் பட்டவனின் பெயரை சொல்லி.. ஐஸ்பைஸ் 1 காந்தி( ஊரில் இப்படி சொன்னால் தான் என்னைத் தெரியும்.. சஞ்சய் என்றால்.. எதோ கெட்ட வார்த்தை என்று நினைத்து அடிக்க வந்துவிடுவார்கள். எங்கம்மா மட்டும் தான் அப்பப்போ சஞ்சய்னு சொல்வாங்க:P)... அடுத்தவன் கண்டுபிடிக்கப் பட்டால் ஐஸ்பைஸ் 2 சந்தோஷ்.. ஐஸ்பைஸ் 3 கவிதா... என்று ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்த எண்ணை சொல்ல வேண்டும். இதே போல் அனைவரையும் கண்டு பிடித்துவிட்டால் முதலில் கண்டுபிடிக்கப் பட்டவன் அடுத்த இளிச்சவாயன். :)).. அடுத்து அவன் மற்றவரை கண்டுபிடிக்க வேண்டும்.

ஒரே ஆட்டத்தில் எல்லோரையும் கண்டு பிடிப்பதெல்லாம் நடக்காத காரியம்... சில உள் நாட்டு அரசியல்கள் கைக் கொடுக்காத வரை.. :P...

எல்லோரையும் கண்டுபிடிக்கவில்லை என்றால் எப்படி ஆட்டம் முடியும்?.. முடியுமே... மாட்டிக்கொண்டவன் ஒருவனைக் கண்டுபிடிப்பதற்கு முன் அல்லது கண்டுபிடித்தும் அவன் பேரை சொல்வதற்குள் இவனை வந்து தொட்டுவிட்டால் ஆட்டம் முடிந்தது. பிறகு இவனே மறுபடி கண்டுபிடிக்க வேண்டும்...:D

முக்கிய விதி : எல்லோரையும் கண்டுபிடிப்பதற்குள் கண்டுபிடிப்பவனை யாராது தொட்டு, ஆட்டம் முடியும் போது மற்ற எல்லோரும் மறைவிடத்தில் இருந்து வெளிப்பட வேண்டும். அப்படி யாராவது வெளியில் வரவில்லை என்றால் அவர்கள் ஆட்டத்தில் இருந்து நீக்கப் படுவார்கள். அடுத்த முறை அவர்களை கண்டுபிடிக்கத் தேவை இல்லை. ஏன்னா.. அவன் வீட்டிற்கு போய் சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.. அல்லது மாமா, சித்தப்பா என்று யாருடனாவது சைக்கிளில் கிளம்னி இருப்பான்.. அடுத்த முறை( அடுத்த நாள் ) அவன் ஆட்டத்திக் சேர வேண்டும் என்றால் அநியாயத்திற்கு கெஞ்ச வேண்டும். அப்படியே சேர்த்துக் கொண்டாலும் அவன் தான் பிறரை கண்டுபிடிக்க வேண்டும்.. கண்ணைக் கட்டிக் கொண்டு யாரையும் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை...

அதே போல்.. ஆட்டத்தில் இடையில் யாராவது சேர்ந்துக் கொள்ள விரும்பினாலும் இதே நிலை தான்.. புதிதாக சேர்பவன் தான் பிறரைக் கண்டுபிடிக்க வேண்டும்.. அதுவரை கண்டுபிடித்துக் கொண்டிருந்தவன் ஒளிந்துக் கொள்பவரின் லிஸ்ட்டில் சேர்ந்துக் கொள்வான்.

உள்நாட்டு அரசியல் சதி 1 :-
முதலில் கண்டுபிடிக்கப் பட்டவன் பிறருக்கு பிடிக்காதவனாக இருந்தால் மற்றவர்கள் அவர்களாகவே வந்து மாட்டிக் கொள்வார்கள். அப்போ தானே முதலில் கண்டுபிடிக்கப் பட்டவன் அடுத்து மாட்டுவான். அவன் மாட்டும் போது இவர்கள் சிக்கவே மாட்டார்கள். அல்லது எப்படியாவது இவனை தொட்டுவிடுவார்கள். :))

இதற்கு வயசு வித்தியாசம் கிடையாது.. ஆனால் வகுப்பு வித்தியாசம் உண்டு.. 7 அல்லது 8ஆம் வகுப்புக்கு மேல் இருப்பவர்களுக்கு அனுமதி கிடையாது. :)

உள்நாட்டு அரசியல் சதி 2 :-
கண்டுபிடிப்பவன் சிலருக்கு பிடிக்காதவனாக இருந்தால்.. அந்த பிடிக்காத கும்பல் மொத்தமும் ஒரே சமயத்தில் இவனைத் தொட ஓடிவருவார்கள். இவர் ஒரு சமயத்தில் எத்தனைப் பேரைத்தான் சொல்ல முடியும்... ஆகவே அனைவரின் பெயரையும் சொல்லி முடிப்பதற்குள் ஒட்டுமொத்தமாக வந்து தொட்டுவிடுவார்கள். அதில் யார் பெயரையாவது இவன் சொல்லி முடிக்காமல் இருந்திருப்பான். அதனால் இவனே தோற்றவனாக இருந்து மறுபடி கண்டுபிடிக்க தயாராக வேண்டும். அல்லது தொட வருபவர்களிடமிருந்து தப்பித்து ஓடிக் கொண்டே இவனை துரத்துபவர்களின் பெயரை சொல்லி முடிக்க வேண்டும். :P

உள்நாட்டு அரசியல் சதி 3 :-
ஒரு கும்பல் வேறு யாராவது முதலில் மாட்டவேண்டும் என்று நினைத்திருப்பார்கள். அப்படி இல்லாமல் வேறு எதாவது ஒரு அப்பாவி ஜீவன் மாட்டிக் கொண்டால் அந்த கொலைவெறி கும்பல், கண்டுபிடிப்பவனுக்கு உதவி செய்வது போல் யாராவது சிலரை காட்டிக் கொடுத்து அவன் நம்பிக்கையை பெற்று பின் அவனை திசைதிருப்பி பின்னால் இருந்து வந்து எவனையாவது தொட வைத்து விடுவார்கள். இப்போது முதலில் அகப் பட்டவன் தப்பித்து விடுவான்.. :)

உள்நாட்டு அரசியல் சதி 4 :-
ஒருவன் முதலில் கண்டுபிடிப்பவனின் கண்ணில் பட்டாலும் அவன் பேரை சொல்ல மாட்டான்.. எப்படியாவது வேறு ஒருவனைக் கண்டு பிடித்ததும் முதலில் கண்ணில் பட்டவன் தானாகவே இவனிடம் மாட்டிக் கொள்வான். முதலில் சிக்குபவன் தானே பலி ஆடு. இரண்டாவது மாட்டுவது பிரச்சனை இல்லையே.. பிறகென்ன... இரண்டாவதாக அகப் பட்டவன் எல்லோரையும் காட்டிக் கொடுத்துவிடுவான்... இது இவர்கள் இருவருக்கும் முன் கூட்டியே போடப் பட்ட ஜெண்டில்மென் அக்ரீமெண்டாக இருக்கும்... அல்லது இருவரும் நெருங்கிய நண்பர்களாகவோ சகோதரர்கள் அல்லது சகோதரிகளாக இருப்பார்கள். :)

......... இவ்வளவு இருட்டியும் ஊட்டுக்கு வராம என்னடா விளையாட்டு என்று சொல்லி பல முதுகுகளில் பட்டாசு வெடிக்கும் வரை இது போன்ற இளிச்சவாயர்களை நொந்து நூலாக்கிவிடுவார்கள். :P
........ இந்த விளையாட்டு காணாமல் போய் பல ஆண்டுகள் ஆகிறது. இப்போது யாரும் இதை விளையாடுவது இல்லை.... தனியார் பள்ளிகள் கொடுக்கும் வீட்டு பாடங்களும்.. தனியார் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளும் இதை சாப்பிட்டுவிட்டன. உடல் பயிற்சிக்கே வழி இல்லாமல் போய் விட்டது..
........ அதிகாலை கிராமத்து நினைவுகள் 2 பாகம் தாண்டியும் எழுத சரக்கு இருப்பதால்.. இது ஒரு விளையாட்டு இடைவேளை... ஐஸ்பைஸ் பலருக்கும் தெரியாத விளையாட்டாக இருப்பதாக பின்னூட்டத்தில் சொல்லி இருந்ததால் இது முதல் விளையாட்டு இடைவேளையாக இடம் பெற்றிருக்கிறது. ஒரு வேளை மற்ற இடங்களில் இதற்கு வேறு பெயர் இருக்கலாம்.. பின்னூட்டத்தில் சொல்லுங்கப்பு..அடுத்த விளையாட்டு இடைவேளை........... சாணாங்கோல்.. :)
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..

Author: Sanjai Gandhi
•12:45:00 PM

அதிகாலை கிராம நினைவுகள் - 1

குடிநீர் பிடிக்கும் வைபவம்...
.......... மழைக்காலங்களில் பெரிய கஷ்டம் எதும் இருக்காது.... ஆனால் கோடையில்..? குடிநீர்ப் பிரச்சனைப் பெருங்கொடுமை.. மனிதர்க்கு மட்டுமல்ல.. கால்நடைகளுக்கும்... ( அப்போ மனிதர்கள் எல்லாம் எதுல நடக்கறாங்க? :) )... ஊரில் ஒரு பொதுக் கிணறு இருக்கு. இப்போது அதை யாரும் பயன்படுத்துவது இல்லை.. பஞ்சாயத்து மூலம் வீதிக்கு வீதி குடிநீர் குழாய்கள் வந்திடிச்சி.

அப்போது குடிநீர் வேண்டுமானால் ஒரே தண்ணீர்த் தொட்டி தான். அதை சுற்றிலும் நான்கு புறமும் தலா 2 குழாய்கள் இருக்கும். கோடைக் காலங்களில் 5 மணிவாக்கில் ஆபரேட்டர் வந்து மோட்டார் போடுவார். நாங்க எல்லாம் 4 மணியிலிருந்தே அந்த தொட்டியை சுற்றி தவம் கிடப்போம். பலரும் அங்கே உட்கார்ந்துக் கொண்டேத் தூங்கி விழுவார்கள் :)...

ஆளுக்கு ஒரு குடம் என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை.. எல்லாரும் ப்ளாஸ்டிக் குடங்கள், சில்வர்க் குடங்கள், வெண்கலக் குடங்கள், பெரிய பெரிய அண்டா என்று வரிசையாக வைத்திருப்பார்கள். யார் முன்னாடி வராங்களோ அவங்க மொத்தமுள்ள குழாய்களிலும் 2 , 3 குடங்கள் வைத்து விடுவார்கள். ஒரு குடும்பத்தில் 2 , 3 பேர் வரையில் வந்திருப்பார்கள்... சிறியவர்கள் பெரியவர்கள் எல்லாம் இருப்பார்கள்.. வரிசைப்படி தான் தண்ணீர் பிடிக்க முடியும். கடைசியாக வரும் சோம்பேறிகளுக்கு தண்ணீர் கிடைக்காமலும் போயிடும். அவங்களுக்கு அதிகம் தண்ணீர் வைத்திருக்கும் யாராவது குடுப்பாங்க... கிராமங்களை பொருத்த வரையில் பெரும்பாலும் அனைவருமே உறவினர்களாகத் தான் இருப்பார்கள். அதனால் உதவிகள் கிடைக்கும்... அதைவிட அதிக உபத்திரவங்களும் கிடைக்கும்.. :)

தினம் தினம் இதே நிலைதான்... தினம் எதற்கு இவ்ளோ தண்ணீர்?.. பெரும்பாலும் எல்லார் வீட்டிலுமே மாடுகள் அல்லது ஆடுகள் இருக்கும். அவற்றிற்கும் தண்ணீர் வேண்டுமே.. கோடைகாலங்களில் அல்லது மழை பொய்த்துவிடும் சமயங்களில் விவசாயக் கிணறுகளிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்காது. அப்படியே இருந்தாலும் ஊரிலிருந்து சற்று தள்ளியே விவசாய நிலங்கள் இருக்கும்.. அங்கிருந்து எடுத்து வருவது ரொம்ப சிரமம்.. சிலர் மட்டும் சைக்கிள் கேரியரில் குடங்களை கட்டி தண்ணீர் எடுத்து வருவார்கள்..

அதன் பிறகு வீட்டிற்கு போய் பெண்கள் சமையல் வேலை பார்ப்பார்கள்..ஆண்கள் ஆடு மாடுகளை கவனிக்க ( தவிடு, புண்ணாகு, வைக்கோல் வைக்க), பால் கறக்க விவசாய நிலம் இருக்கும் ஏரியாவுக்கு போய்டுவாங்க.. அங்க தான் எறுமை மாடுகளுக்கு கொட்டகை ஆடுகளுக்கு "பட்டி" எல்லாம் இருக்கும்... தினமும் ஆட்டுப் பட்டியை திருப்ப வேண்டும். அதாவது இடம் மாற்ற வேண்டும்...

ஆட்டுப்பட்டி
மூங்கிலால் பின்னப்பட்ட "படல்"கள் என்று அழைக்கப் படும் அமைப்புகளை ஒரு பக்கத்திற்கு குறைந்தது 2 நிறுத்தி 4 பக்கமும் சுவர் போல நிறுத்தி வைத்திருப்பார்கள். ஒரு படலையும் மற்றொரு படலையும் இணைக்க படலில் ஓரங்களில் நீட்டிக் கொண்டிருக்கும் மூங்கில்களில் வளயத்தை மாட்டிவிடுவார்கள். சிறு கயிறுகள் மூலம் படல்களின் மையப் பகுதிகளிலும் கட்டி வைபபர்கள்.

..... ஆட்டுப்பட்டி பற்றி விரிவாக அடுத்த பதிவு.. :))
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..

Author: Sanjai Gandhi
•7:16:00 PM
அதிகாலை 6 மணிக்கு முன்பே எழுந்துவிடுவோம். 4 மணியிலிருந்தே சேவல்கள் கூவ ஆரம்பித்துவிடும். கோழிகள் இல்லாத வீடு எதுவும் இருக்காது. எலலார் வீட்லையும் இருக்கும். அதனால் என்ன அசதியாய் இருந்தாலும் 6 மணிக்கு மேல் தூங்க முடியாது. காக்கா, குருவி , கோழி, சேவல், அணில் இன்னும் பல பல சத்தங்கள் அனைவரின் தூக்கத்தையும் கலைத்துவிடும்.

( பல திருட்டு கோழிகள் கையில் அகப்படாது. வீட்டு கூரையில் அல்லது அருகில் உள்ள மரங்களில் தான் தங்கும். மாலையில் ஓரளவு இருட்ட ஆரம்பித்ததும் வீட்டில் தங்கும் கோழிகள் நல்ல பிள்ளைகளாய் வீட்டிற்குள் வந்து வழக்கமாக அடைபடும் மூலையில் வந்து அமர்ந்துகொள்ளும். அதன் மேல் ஒரு மூங்கில் கூடை வைத்து மூடிவிடுவோம். கோழிகளின் எண்ணிக்கை பொருத்து சில பல கூடைகள் தேவைபடும். எங்கள் வீட்டில் ஒரே சமயம் 25 கோழிகளுக்கு மேல் எல்லாம் இருந்தது.சில அடங்கா கோழிகள் பக்கத்தில் மரத்திற்கு அல்லது வீட்டு கூரைக்குச் சென்றுவிடும். எதுவாயினும் இரவில் ஒரு முறை எண்ணப் படும். அவரவர் வீட்டுக் கோழிகள் பத்திரமாய் இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்வோம். சில ஜொள்ளு சேவல்கள் அது ரூட் விடும் கோழிகள் எங்கு தங்குதோ அங்கே போய்டும். அந்த கோழிக்கு சொந்த காரர்கள் சொல்லிவிடுவார்கள் இந்த சேவல் அவர்கள் வீட்டில் இருக்கு என்று. பிறகு நாம் போய் அதை பிடித்து வர வேண்டும். :P)

எழுந்தவுடன் காலை கடன்கள் முடித்து அல்லது முடிக்காமல் - அவரவர் அவசரத்தை பொருத்து :P - அடுப்புக்கு அருகில் வந்துவிடுவார்கள். பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் சோளக் கூழ் காய்ச்சுவார்கள். எங்க வீட்டில் எப்போதும் இருந்ததில்லை.. :(.. ஆகவே அருகில் இருந்த தாத்தா வீட்டிற்கு சென்றுவிடுவேன். தாத்தா ( அதாவது பாட்டி... கிராமங்களில் பாட்டி என்ற வார்த்தையே சமீக வருஷங்களில் தான் அறிமுகம் ஆயிருக்கு.. தாத்தா , பாட்டி எல்லோருமே எங்களுக்கு தாத்தா தான்) மாற்றடுப்பில் கூழ் காய்ச்சிக் கொண்டிருப்பார். எல்லார் வீட்டு அடுப்பிலும் 2 அடுப்பு இருக்கும். ஒன்று மெயின் அடுப்பு.. அதில் தான் விறகு வைக்க இடம் இருக்கும்.. இன்னொன்று மாற்றடுப்பு ( மாத்தடுப்பு) .. வலது புறம் இருக்கும்..மெயின் அடுப்பின் நுழைவாயிலில் அதிக விறகுகளை வைத்து எரிக்கும் போது அதிக நெருப்பு எரியும். மெயின் அடுப்பின் மீது வைத்திருக்கும் பாத்திரத்தின் வழியாக முழுமையாக வெளியேற முடியாமல் அது மாற்றடுப்புக்கும் போகும்.

மாத்தடுப்பில் சுடச்சுட கூழ் தயாராய்ட்டு இருக்கும். குளிர்காலமா இருந்தா அனலில் கைகாட்டி உள்ளங்கையை முகத்தில் வைத்துக் கொள்ளும் சுகமே தனி. கூழ் தயாரானதும் அதில் கொஞ்சம் மோர் கலப்பார்கள். அப்போது தான் சுவை இன்னும் கூடும். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மோர் கடைந்து வச்சிடுவாங்க.

அடுப்பில் கூழ் இருக்கும் போதே மோர் விட்டு கலக்கியதும் சுட சுட டம்ப்ளரில் ஊற்றிக் கொடுப்பாங்க. 4, 5, 6 டம்ப்ளர்கள் என்று உள்ளே போய்க் கொண்டே இருக்கும்.. கூழ் தீரும் வரை.. :).. குடித்து முடித்ததும் அப்படியே க்ளாசை வீசீவிட்டு ( வேலை முடிஞ்சதுல்ல :D.. எங்க வீட்ல ரொம்ப கண்டிப்பு - சின்ன வயசுல.. இப்போ இல்ல.. ஆனா தாத்தா வீட்ல , பெரியம்மா வீட்ல எல்லாம் ஓவர் செல்லம்.. யார் பேச்சையும் கேக்கறதில்லை...) வீட்டிற்கு வந்துவிடுவேன்... வந்து படிப்பு அல்லது படிப்பது போல் நடிப்பு.. :)

கூழ், மண் சட்டியில் தான் காய்ச்சுவாங்க... சோறு மற்றும் சில வறுக்கும் ஐட்டங்கள் தவிர மற்ற எல்லாம் மண் சட்டியில் தான். அதன் சுவை ரொம்ப அதிகம். பெரும்பாலான வீடுகளில் அவ்வப்போது தேவையான அளவு நெல் உரலில் போட்டு உலக்கையால் குத்தி அரிசியாக பிரிபபார்கள். அப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் சாமை அல்லது வரகு( கேள் வரகு இல்லை) சோறு தான். நெல்லு சோறெல்லாம் சில வீடுகளில் தான். ஆகவே நெல் சோறு என்றாலே அது கை குத்தல் அரிசிதான். மில்களில் அரைப்பது போல் வெண்மையாக இல்லாமல் கொஞ்சம் பழுப்பு நிறமாக இருக்கும்.

எல்லார் வீட்லையும் எருமை மாடு , பசு மாடுகள் நிச்சயம் இருக்கும். அதனால் எல்லார் வீட்லையும் மோர் இருக்கும். மோர் கலக்கும் முறையே ரொம்ப வித்தியாசமா இருக்கும்... சுவரை ஒட்டி ஒரு சிறிய கொம்பு நட்டிருப்பார்கள். அதில் ஒரு கயிறு கட்டி இருக்கும். மோர் கடைய "மத்து" இருக்கும். அந்த மத்தின் மையப் பகுதியில் கயிறு சுற்றுவதற்கு ஏற்றவாறு வடிவமைப்பு இருக்கும். அப்போது தான் கயிறை இழுக்கும் போது மத்து பாத்திரத்தின் அடிப் பகுதியில் முட்டாமல் இருக்கும். சுவர் ஓரம் நட்டு வைத்திருக்கும் கொம்பிற்கு அருகில் தயிர் இருக்கும் பாத்திரத்தை வைத்து அதில் மத்தை விட்டு அந்த கொம்பில் இருக்கும் கயிறுக்குள் மத்தை நுழைத்துகொள்ள வேண்டும். பிறகு மத்தில் இருக்கும் கயிறின் இரு முனைகளையும் இரு கைகளிலில் பிடித்து முன்னும் பின்னும் இழுக்க வேண்டும். அப்போ மத்து இடதும் வலதும் சுற்றும். தண்ணீர் கலந்த தயிரில் இருந்து சிறிது நேரத்தில் வெண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும். அதை கையில் எடுத்து வேறு பாத்திரத்தில் வைத்துவிட்டு மோர் இருக்கும் பாத்திரத்தை கூரை பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிறில் வைத்துவிடுவார்கள். தேவை படும் போது எடுத்துக் கொள்வார்கள். பூனை மற்றும் எறும்பின் தொல்லையில் இருந்து தப்பிக்க மோர் மற்றும் வெண்ணெய் தூக்கில் தொங்க விட்டுவிடுவார்கள்.

.............. இன்னும் வெளிச்சம் வரவில்லை.. அதிகாலை தொடரும்.. :)
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..

Author: Sanjai Gandhi
•12:01:00 AM

6 மணிக்கு முன்பு முழிப்பு
சுடச்சுட தாத்தா வீட்டு சோளக்கூழ்
கலர் கோழிகுஞ்சு
25பைசா இட்லி
50 பைசாவிர்கு 16கிமீ பேருந்து பயணம்
தேன்மிட்டாய்
இலந்தை பழம் ஊறுகாய்
காக்கா கடி மிட்டாய்
பம்பரம்
கோலி குண்டு
இரவு நேர தினசரி கபடி
ஐஸ்பைஸ் விளையாட்டு
குச்சி ஐஸ்
இரவு நேர கண்ணாமூச்சி
அஞ்சாங்கல்
பணங்காய் வண்டி
சோளத் தட்டு வண்டி
புல் கோட்டி
கூட்டாஞ்சோறு
உப்பு + மிளகாய் பொடி சேர்த்த புளியங்காய்
கடலையும் வெள்ளமும் கலந்த ஊறவைத்த அரிசி
பொண்வண்டு
காரைப்பழம்
பூலாப்பழம்
எலந்தைபழம்
நாகப் பழம்
குருவி முட்டை சுடறது
நண்டு பிடிச்சது
காட்டிற்கு போய் பெருங்கும்பலாய் மாடு மேய்த்தது
மாட்டு வண்டி பயணங்கள்
வழுக்கு மரம்
10 ஆண்டுகளுக்கு முண்டு வெளிவந்தும் பண்டிகை காலங்களில் புதுபடங்களை போல் கூட்டம் அலைமோதும் சினிமா கொட்டகை...

................ இன்னும் மறந்து போன ஏராளமான கிராமத்து அடையாளங்களை எழுத்து வடிவிலாவது சேமித்து வைக்கும் ஒரு சிறிய முயற்சியே
"என் கிராமத்து நினைவுகள்"

இவை எல்லாம்.. எதோ 50 , 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை அல்ல.. 10 , 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமத்து பசங்களின் தினசரி வாழ்க்கையில் பிரிக்க முடியாதவைகளாய் இருந்தவைகள் தான்...

இவற்றில் பெரும்பாலானவற்றை கபளீகரம் செய்த பெருமை செயற்கைகோள் தொலைகாட்சிகளையே .. குறிப்பாக சன் டிவியையே சேரும்...
பெரும் லட்சாதிபதிகளையும் லோட்டீஸ்வரர்களையும் உருவாக்க நினைத்து சிறுவர்களின் நேரத்தை உறிஞ்சும் பெற்றோர்கள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இதன் அழிவில் பங்குண்டு.....

எந்த அறிவியல் வளர்ச்சி இந்த கிராமத்து அடையாளங்களை சுவடுகள் கூட இல்லாமல் ஆக்கியதோ... அதே அறிவியல் வளர்ச்சியை கொண்டே அழிந்து போன அடையாளாங்களை பிரதி எடுத்து வைப்போம்... என்றாவது ஒரு நாள் எதாவது ஒரு சந்ததியை எந்திர வாழ்க்கை எரிச்சலூட்டும்.. அப்போது அவர்களுக்கு இவைகள் பயன்படும்...

வாருங்கள்....இனி கிராமத்தில் பயணிக்கலாம்....
பிடிச்சிருந்தா வாக்களியுங்கள்..